Saturday, June 28, 2008

ம.க.இ.க. தத்துவக் குருடர்களும் புரட்சிகர அரசியலும்!

ம.க.இ.க.வின் மறைமுகத் தலைமையான (மாநில ஒருங்கிணைப்புக்குழு - இந்திய பொதுவுடைமை கட்சி - மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியென அழைத்துக் கொண்டு திரிபுவாதத்தையும், சீர்குலைவுவாதத்தையுமே முதலாக கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக செயலாற்றிக் கொண்டு வருவதை முன்பதிவுகளில் பார்த்தோம். இந்திய அரசியலையும் - அதன் வர்க்கத் தன்மையையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றமே, அதன் ஒட்டுமொத்த நடைமுறை தந்திரம் தொடர்பான நிர்ணயிப்புகளுக்கும் அடிப்படைத் தவறாக அமைந்துள்ளது.இந்திய சுதந்திரத்தை போலி சுதந்திரமாக பார்ப்பதும், இன்னமும் இந்தியா அரை காலனி - நான்கு நாட்டு அடிமை சேவகம் - மறு காலனி என்று தொடர்ந்து காலனி மோகத்தில் குளிர் காய்வதால் இந்திய பாராளுமன்ற அரசியலிருந்து துறவறம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் அதன் தத்துவ ஊனம் அடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து “பாராளுமன்றம் பன்றித் தொழுவம்”, “போலி தேர்தல்”, “போலி பாராளுமன்றம்”, “ஓட்டுப் பொறுக்கிகள்” என்று அடுக்கடுக்காக வாய்ஜாலம் பேசி தேர்தல் அரசியலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இந்திய மக்களின் விரோதிகள் நாங்கள் மட்டுமே புரட்சிக்காரர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை பம்மாத்து செய்வதோடு அதற்கு மாற்றாக ஆயுதப் புரட்சி என்று கூறி அவமானப்படுத்துகிறது. இவர்களது பாராளுமன்ற அரசியல் குறித் குறித்து எஸ்.ஓ.சி. திட்டம் 26வது பிரிவு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“இந்தியப் பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் தங்களின் கொடுங்கோன்மைச் சர்வாதிகாரத்தை மூடி மறைக்கும் பொருட்டு நாடாளுமன்ற ஜனநாயகம் என்று அழைத்துக் கொள்ளும் முகத்திரையைப் பயன்படுத்துகின்றன. சாராம்சத்தில் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களின் விசுவாசமான ஊழியர்களான திரிபுவாதிகளும், நவீன திரிபுவாதிகளும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்று அழைத்துக் கொள்ளும் அதிகாரமற்ற அமைப்பை மக்களின் விருப்பங்களுக்கான கருவி என்று ஒப்பனை செய்கிறார்கள். சோசலிசத்திற்கான பாதைiயாக சமாதான நாடாளுமன்றப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்களது துரோகத்தனத்தை ‘சோசலிசத்திற்கான இந்தியப் பாதை’ என்று வர்ணிக்கிறார்கள். வர்க்கமற்ற அரசியல், வர்க்கமற்ற சோசலிசம் என்று வழிகாட்டுதல் நமது நாட்டின் பரந்துபட்ட மக்களை புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து திசை திருப்பும் முதலாளியத் தந்திரமாகும்....”

இவ்வாறு கூறுவதன் மூலம் மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து தன்னை மிக உயர்வுகாக காட்டிக் கொள்ள முனைகிறது இந்த தத்துவ குருட்டுப் பூனை. மேலும் திரிபுவாதிகள் என்று இடதுசாரிகளை குற்றம் சுமத்துவது சாட்சாத் இவர்களுக்கே மிகச் சரியாக பொருந்துகிறது. குறிப்பாக, இவர்களது வாதப்படியே யார் வர்க்கமற்ற அரசியல் என்று சொல்கிறார்கள்? சமாதானமான நாடாளுமன்றப் பாதை மட்டுமே புரட்சிகரப் பாதை என்று வர்ணித்துள்ளார்கள்? என்று நமக்குத் தெரியவில்லை! சி.பி.எம். தனது கட்சித் திட்டத்திலோ அல்லது கொள்கை அறிக்கையிலே இவ்வாறு எதையும் கூறவில்லை. இவர்களது கற்பனை கோட்டைக்கு அளவில்லாமல் போனதன் விளைவும் தனது அணியினை திருப்திப்படுத்துவதற்காக ஆயுதப் போராட்டம் ஒன்றே தீர்வு என்று கூறி திண்ணை வேதம் ஓதுகிறது இந்த பார்ப்பனீயத் தலைமை!பாராளுமன்ற அரசியல் குறித்து மாமேதை லெனின் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்! விஞ்ஞானப் பூர்வ கம்யூனிசத்திற்கு பாதை அமைத்தவர் தோழர் லெனின். ரஷ்ய மற்றும் உலக அனுபவங்களின் மூலம் கம்யூனிச தத்துவத்திற்கு பாதையமைத்த லெனின் “இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு” என்ற புத்தகத்தில் - முதலாளித்துவ பாராளுமன்றங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளலாமா? என்ற துணைத் தலைப்போடு இது குறித்து விரிவாக ஆராய்கிறார். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்:“முதலாளித்துவப் பாராளுமன்றங்களையும், இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிலும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்த ஆகவேண்டும்”

தோழர் லெனின் அவர்களின் மேற்கண்ட நிலைபாடு ம.க.இ.க. மறைமுகத் தலைமைக்கு மட்டும் பொருந்தாது! ஏனெனில் இவர்கள் இந்தியப் புரட்சியை வெறும் கற்பனையில் மட்டும் பார்ப்பதால் - தங்களது கற்பனை வளத்தின் மூலமே இந்திய அரசை வெகு சீக்கிரத்தில் தூக்கியெறியும் அசுர பலத்தோடு இவர்கள் இருப்பதாக எண்ணிக் கொண்டு, வெகுஜனங்களின் எளிய உணர்வுகளை அரக்கத்தனமான காலில் போட்டு மதித்து விட்டு, போலி பாராளுமன்றம் என்று புரளி பேசி, மக்களின் அரசியல் உணர்வுகளை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியும் - திசை திருப்பும் செயலினைத்தான் இவர்களிடம் பார்க்க முடிகிறது.மேலும் இதுபோன்ற வாய்ச்சவடால் அமைப்புகள் குறித்து லெனின் கீழ்வருமாறு உரைக்கிறார்:
“பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். இவ்வாறு வேலை செய்யாவிடில், நீங்கள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்.”அதாவது, ஜெர்மானிய நிலைமையை முன்வைத்து அவரது வாதம் இங்கே கட்டமைக்கப்பட்டாலும், தற்போதைய இந்திய நிலைமைக்கும் இது முற்றிலும் பொருந்தும். இந்தியாவில் உள்ள 110 கோடி இந்திய மக்களில் பெரும் பகுதியினர் கல்வியறிவு பெறாதோராய், மிகவும் வறிய நிலையில் வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற நிலையில் இருப்பதைத்தான் காண்கிறோம்.

னவே இத்தயை எளிய மக்களின் அரசியல் உணர்வு மட்டம் தனிபர் ஹீரோயிசம் சார்ந்ததாகவே இருக்கும்.எனவே இத்தகைய எளிய மக்களிடம் வெளிப்படையாக செயலாற்றி அவர்களது அரசியல் உணர்வு மட்டத்தை உயர்த்துவதற்கு மாறாக, ஆயுதப் புரட்சி என்று பேசுவது தொழிலாளி வர்க்கத்தின் குரலை வெளிப்படுத்துவதாக அமையாமல் தங்களின் உள்ளுனர்வு அடிப்படையில் இயங்கும் கற்பனாவாத தத்துவத்தைதான் ம.க.இ.க.வினரிடம் காண முடிகிறது. இது குறித்து தோழர் லெனின் கூறுவதை நோக்குங்கள்.

“ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள “இடதுசாரிகள்” இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது பிழையை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம் தாம் ஒரு சிறு குழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத்துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி வெகுஜனங்களது கட்சியல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர்.”

மேற்கண்ட நிர்ணயிப்பின்படி நாம் தொடர்ந்த வலியுறுத்துவது போல் ம.க.இ.க. நக்சலிச கும்பல் ஒரு குழுவேயன்றி பாட்டாளி வர்க்க கட்சியல்ல என்பது நிருபனமாகிறது.மேலும் தோழர் லெனின் கூறுவதை கேளுங்கள்:

வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மை இல்லாமல், இந்த மனப்பான்மை வளர்வதற்கு அனுசரணையான நிலைமைகள் இல்லாமல், புரட்சிகரப் போர்த்தந்திரம் ஒரு நாளும் செயல் நிலைக்கு வளர்ச்சியுற முடியாது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் ருஷ்யாவில் நீண்ட நெடிய கொடிய அனுபவமானது, புரட்சிகரப் போர்த்தந்திரத்தைப் புரட்சிகர மனப்பான்மையின் அடிப்படையில் மட்டும் உருவாக்கி விட முடியாதென்ற உண்மையை எங்களுக்கு போதித்துள்ளது.”

ம.க.இ.க. குழுவினர் லெனினின் பிறந்த நாளுக்கு அவரது எண்ணங்களில் ஒருசிலவற்றை போட்டு விட்டு தங்களைப் புரட்சிகரமானவர்களாக நிலைநாட்டிக் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் அவரது சிந்தனையை குழிதோண்டிப் புதைப்பதைத்தான் இவர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவுக்கான புரட்சியை சீன பாணியைக் கொண்டு காப்பியடிக்க முற்படுகிறார்களே ஒழிய எதார்த்த அனுபவங்களை எந்த உரை கல்லிலும் பரிசீலிப்பதில்லை. இவர்களைப் போன்றே நக்சலிசம் பேசிய லிபரேசன் குழுவினர் தங்களது ஒட்டுமொத்த திட்டத்தையும் தற்போது தலைகீழாக மாற்றி விட்டனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. ஆனால் இவர்களது கற்பனையில் மட்டும் இந்தியாவில் ஏதோ மாபெரும் புரட்சிகர எழுச்சி நிலவி வருவதாகவும் அதற்கு தடையாக மற்றவர்கள் இருப்பதாகவும் கணா கண்டுக் கொண்டிருக்கிறது.ம.க.இ.க.

தலைமை வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மையை காண்பதற்கு பதிலாக தங்களுக்குள் மட்டுமே அது உயர்வாக இருப்பதாக மதிப்பிடுவதே அதன் சீர்குலைவை வெளிப்படுத்துகிறது. மேலும் இவர்களது போலி பாராளுமன்ற வாதம் எப்படிப்பட்ட அயோக்கியத்தனமானது என்பதை லெனினின் வார்த்தைகள் மூலமே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.“பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதால் மட்டுமோ, பாராளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதால் மட்டுமோ ஒருவர் தமது “புரட்சிகர” மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டு விடுவது மிக மிகச் சுலபம். ஆனால் இந்தச் சுலபத்தின் காரணமாய், இது கடினமான, மிக மிகக் கடினமான ஒரு பிரச்சினைக்குரிய தீர்வாகி விடுவதில்லை.

மேலும் தோழர் லெனின் இது குறித்து விளக்கும் போது,நீங்கள் ஒரு புதிய சமுதாயம் சமைக்க விரும்புகிறீர்கள். ஆயினும் திடநம்பிக்கையும் பற்றுதியும் கொண்ட வீரமிக்க கம்யூனிஸ்ட்டுகளாலான சிறந்த பாராளுமன்றக் குழு ஒன்றினைப் பிற்போக்குப் பாராளுமன்றத்தில் நிறுவிக் கொள்வதிலுள்ள சிரமங்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள்! இது சிறு பிள்ளைத்தனமானதல்லவா?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் நிலவும், ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துக் கொண்டுள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்தவ - நிலப்பிரபுத்துவ சமூகத்தை தூக்கியெறிந்து - மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்க அரசை ஆட்சியில் அமர்த்துவது என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்றுகிறது. இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான நடைமுறைத் தந்திரத்தின் ஒரு பகுதியாகவே மக்கள் பங்கேற்கும் நாடாளுமன்ற அரசியலிலும் பங்கேற்கிறது. அதற்காக நாடாளுமன்ற பாதையின் மூலமாகவே புரட்சியை நடத்தி விடுவோம் என்று எங்கும் சி.பி.எம். கூறவில்லை. மேலும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை அவர்களது கூடாரத்திற்குள்ளே நின்று வெகுவாக அம்பலப்படுத்த முடியும் என்பதோடு, சில - பல விஷயங்களில் ஏழை - எளிய மக்களுக்கான நிவாரணத்தையும் பெற்றுத்தர முடியும் என்ற கடமையைத்தான் சி.பி.எம். நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதற்காக மத்திய அரசியல் பதவிக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலையவில்லை! இரண்டு முறை பிரதமர் பதவி உட்பட மத்திய மந்திரிப் பதவிகள் தேடி வந்த போது அதை வேண்டாம் என்று உதறித் தள்ளிய கட்சி சி.பி.எம்.! இதையெல்லாம் வேண்டும் என்றே புறம் சொல்லி - தரம் தாழ்த்தும் குணம் படைத்த ம.க.இ.க. தலைமை தங்களது தொண்டர்களை தேர்தல் பாதைக்கு தள்ளி விட்டால் அவர்கள் முதலாளித்துவ கட்சிகளைப் போல் சீரழிந்து விடுவார்களோ என்ற சந்தேகப் பார்வைதான் விஞ்சுகிறது!மேலும், முதலாளித்துவ பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுப்பதற்காக தேர்தலில் வெறும் சீட்டுக்காகவும், பெற்ற சீட்டுக்காக கோடிக்கணக்கில் தனிநபரே செலவழிக்கும் இழிவான முதலாளித்துவ செயலை சி.பி.எம். மேற்கொள்வதில்லை. எந்த இடத்திற்கு - யாரை கட்சி நிறுத்துகிறதோ அவர்களுக்கான தேர்தல் செலவு முழுவதையும் கட்சியே ஏற்கிறது. (மக்கள் பணம்) அவ்வாறு தேர்வு செய்யப்படும் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கும் சம்பளம் முழுவதையும் கட்சியிடமே ஒப்படைத்து விட வேண்டும். அதுதான் இதுவரை நடந்துக் கொண்டிருக்கிறது. முழுநேர ஊழியர் முதல் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர் வரை புதியதாக வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட கட்சியிடம் அனுமதி பெற்ற பிறகே கட்ட முடியும்!

எனவே பாராளுமன்றத்தை பன்றித் தொழுவம் என்று கூறி சி.பி.எம். மீது சேறை அள்ளி வீசும் வாய்ஜாலத்தால் மட்டும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை புரட்சிகர சக்தியாக மாறி விட முடியாது! மாறாக அதன் அரசியல் நடைமுறைத் தந்திரம் ஏகாதிபத்திய சீரழிவிற்கும் - கம்யூனிசத்தை மக்களிடம் இருந்து பிரிக்கும் தந்திரத்திற்குமே வழிவகுக்கும். மொத்தத்தில் சீரழிந்த அரசியலுக்கு மொத்த குத்தகை எடுத்திருப்பவர்களே ம.க.இ.க. குழுவினர்.மேலும் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் ஜார் காலத்தில் இருந்த படு பிற்போக்கான டூமாவில் சில நேரங்களில் புறக்கணித்தும் சில நேரங்களில் ஆதரித்தும் பணியாற்றி வந்தனர். இதற்கான அடிப்படையாக அமைந்தது. ஒரே காரணிதான். ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கம் புரட்சிகர எழுச்சி பெற்றிருக்கும் தருணத்தில் டூமாவை புறக்கணித்தது. மாறாக, புரட்சிகர தாகவும் சோர்வுற்றிருந்த தருணத்தில் பாராளுமன்றத்தை பயன்படுத்தியது. இத்தகைய எந்த அனுபவத்தையும் நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிப்பது ம.க.இ.க.வின் இளம் பிள்ளை வாதத்தைத்தான் காட்டுகிறது!

தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது! நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது! என்று மார்க்சிய ஆசான் ஸ்டாலின் கூறியதற்கு மொத்தமாக பொருந்துபவர்கள் .... குழுவினரே!

சந்திப்பு

http://santhipu.blogspot.com/

2 comments:

Anonymous said...

எதிர்பார்த்து காத்திருந்த கட்டுரை, மிகவும் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். சமகாலபிரச்சனைகளுக்கும், தத்துவ சித்தாந்த விளக்கங்களுக்கும் இந்த BLOG உபயோகமாக உள்ளது. நன்றி.

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் சிபிஎம் நலைபாடு குறித்து கட்டுரை எழுதுமாறு வேண்டுகிறேன்.

Anonymous said...

Fantastic atricle with philosophical evidences to prove the Blindness Plan of SOC. This very useful for the youth who are attracted towards communism and confused on which party to go with.

One reservation:

You said: CPM is not only looking for the mere seats in Parliament elections. But the latest alliance with ADMK proves that CPM is only looking for number of seats.

Could you please answer it?

Mukilan