Monday, December 12, 2011

குருட்டு .திருட்டு பூனை: மகஇக

சில தினங்களுக்கு முன்பு, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பகைமை வேண்டாம், பரஸ்பரம் புரிதல் வேண்டும் என்ற கருத்தில், ஒரு பதிவெழுதி இருந்தோம். சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு நிலைபாட்டிலிருந்து அதனை விளக்க முற்பட்டிருந்தோம். அதிலுள்ள சில வரிகளை எடுத்து வைத்துக்கொண்டு நேற்று இணையச் சண்டியர் வினவுக் கும்பல் சிலா வரிசை போட்டிருக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.எம் ஆகிய மூன்று தேசீயக் கட்சிகளை மும்மூர்த்திகளாக்கி, அவர்களை தனிமைப்படுத்தினால் போதும், முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் தானாக தமிழகத்தின் பக்கம் பெருக்கெடுத்து வரும் என கம்பு சுழற்றியிருக்கிறது.


பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. எப்போதுமே அவைகளுக்கென்று  ஒரு தொலைநோக்குப் பார்வையும் மக்கள் மீதான அக்கறையும் இருந்ததில்லை. மக்களிடையே பிரிவினைகளை விதைத்த வரலாறு அந்தக் கட்சிகளுக்குண்டு. அதில் குளிர்காய்ந்து அந்தக் கட்சிகள் தங்கள் அரசியல் பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கின்றன. அவைகளோடு சி.பி.எம்மையும் சேர்ப்பதில்,  வினவுக்கும்பலுக்கு  அலாதி சந்தோஷம் போலும்.  உண்மையைப் புரட்டும் இந்த மூடக்கும்பல் இனி புரட்டுக் கம்யூனிஸ்டுகள் என்றே அழைக்கப்படுவார்கள். சி.பி.எம்மின்  அரசியல் தலைமைக்குழு, மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறது:“முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து விசாரிக்க உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது விசாரணையை விரைவுபடுத்தி இந்தப்பிரச்சனையில் உரிய காலத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதுவரை மத்திய அரசு தலையிட்டு கேரள, தமிழக அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அணையின் பாதுகாப்புக்கு தேவைப்படும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.”இதில், எங்கே சி.பி.எம் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைப்பதாக இந்த புரட்டுக் கம்யூனிஸ்டுகள் சொல்கிறார்கள்?  உச்சநீதிமன்றத் தீர்ப்பு விரைவாக்க வேண்டும் எனவும், அதுவரையில் அணையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும்தானே சொல்கிறது. ஆனால் இருக்கும் அணையை உடைத்து, புதிய அணை கட்டவதற்கு  தமிழகத்தை தயார்படுத்தும்  நோக்கமிருக்கிறது சி.பி.எம்முக்கு என்று ஒரு அயோக்கியத்தனமான குற்றச்சாட்டை போகிற போக்கில் வைக்கிறது இந்த வினவுக்கும்பல் (அ) புரட்டுக் கம்யூனிஸ்டுகள். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு சி.பி.எம்மைத் தனிமைப்படுத்த வேண்டும் என்னும் கண்மூடித்தனமான வெறி இந்த கும்பலுக்கு இருப்பது தெரிகிறது.முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கும் சூழலில், சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இப்படி தனது நிலைபாட்டை எடுத்து அறிவிப்பதற்கு என்ன அர்த்தம் இருக்கும் என்பது இந்த அதிமேதாவிகளுக்குத் தெரியாதா? தீவீரத்தை மட்டுப்படுத்துவதற்கும், நிதானம் கொள்ள வைப்பதற்கும் இந்த நிலைபாடு உதவுமா இல்லையா? அதிலிருந்தே தெரியுமே, இந்த நிலைபாட்டின் உண்மையான அர்த்தம்? 


இதற்கு மாற்றாக கட்சிக்குள்ளே யார் பேசினாலும், செயல்பட்டாலும், அது தோழர்.அச்சுதானந்தனாகவே இருந்தாலும் அது கண்டிக்கதக்கது அது மட்டும் அல்ல கேரள சிபிஎம் குழுவும் அவரை கண்டித்து உள்ளது. அதை சரிசெய்வதும் அரசியல் நேர்மை கொண்ட  ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரம். சி.பி.எம் என்ற அகில இந்திய கட்சி தன் கருத்தாக எதை மக்களிடம் தெரிவிக்கிறது என்று பார்ப்பதே அறிவுடமை. அதில் என்ன குறைபாடு இருக்கிறது என்று நேர்மையாகச் சொன்னால் விவாதம் நடத்தலாம். இந்த நிலைபாடு அதன் உள்ளடக்கத்தில், ஒரு பொதுவான முடிவுக்கு இருதரப்பும் கட்டுப்பட வேண்டும் என்று சொல்கிறது. பகைமை உணர்வு தூண்டப்படுவதற்கு வழிகோலாமல் மத்திய அரசு தன் பொறுப்பைச் செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டுகிறது.  ‘டேம் 999’ படம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தபோது, கருத்துச் சுதந்திரத்துக்கு குரல் கொடுப்பதற்கு மாறாக,  அந்தப் படத்தைத் திரையிடுவது பிரச்சினையை மேலும் பெரிதாக்கும் என்றுதானே சி.பி.எம் கட்சி சொல்லியது. அதிலெங்கே தமிழகத்துக்கு துரோகம் செய்யும் சிந்தனை இருக்கிறது? இனிமேலும் வினவுக்கும்பல் இதுபோல சில்லுண்டித்தனங்கள் செய்யாமல் நேர்மையாக அரசியல் பேசினால், விவாதத்துக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.முல்லைப் பெரியாறு பிரச்சினையை வைத்து இரு பக்கமும் எழுப்பப்படும் பகை மூட்டம் இந்த வினவுக்கும்பல் அறியவே இல்லையா? இதே இணையத்தில் தமிழில்தான் ‘தமிழர்கள்’ என்றும்,  ‘மலையாளிகள்’ என்றும் வார்த்தைகள் சமீபகாலமாகக் கொட்டப்படுவதை வினவுக்கும்பலின் கண்களுக்குத் தட்டுப்படவேயில்லையா?  இந்த மனோபாவம் எதைக் கட்டியெழுப்பும் என்று இந்த மூடக்கும்பலுக்குப் புரியாதா? எல்லாம் தெரியும். எரிகிற வீட்டில் எதையாவது பிடுங்கித் தின்ன முயலும்  இந்த அற்பக்கும்பலுக்கு இன்னும் ஏன் சர்வதேச பாட்டாளி வர்க்கம் என்னும் அந்த அற்புத சொற்றொடரெல்லாம்?ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுவிட்டது. இன்று பூதாகரமாய் உருவெடுத்திருக்கிறது. அதை சேதாரங்களின்றி எப்படித் தீர்ப்பது என்று யோசிப்பதே இப்போதைய கடமை. அதைவிட்டு விட்டு, பிரதேச, மொழி, இனப் பகைமையை ஊட்டுவது குறுகிய அரசியல். எதிர்காலத்தையே அது சிதைத்துப் போடும். முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் வருவதும் முக்கியம். தமிழகம், கேரள மக்களிடையே இணக்கமும் உறவும் மலருவதும் முக்கியம். அதை நிலைநிறுத்துவதுதான் இன்றைய சோதனை. அதை உணர்ந்துதான்  மார்க்சிஸ்டுகள்  பேசுகிறார்கள். இரு மாநிலங்களுக்குள்ளேயில்லை, பங்களாதேஷூடனான நதிநீர் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு கண்டவர்கள் இந்திய மார்க்சிஸ்டுகள் என்பதை காலம் குறித்தே வைத்திருக்கிறது.யாரையாவது வம்புக்கிழுத்து, வாய்க்கு வந்தபடி பேசி திருப்தி கொள்ளும் இந்த வினவுக்கு ஒரு கேள்வியை இப்போது வைக்கிறோம். இவ்வளவு தூரம் வந்துவிட்ட இந்த முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு, சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு நிலைபாட்டை நிராகரித்துவிட்டு,  இப்போது ஒரு சுமூகமானத் தீர்வை சொல்லுங்களேன் ஐயா, பார்ப்போம். உங்கள் சர்வதேச பாட்டாளி வர்க்க புரட்சிகர சிந்தனையையெல்லாம் கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள், கேட்போம்.அது அவர்களால் ஒருபோதும் முடியாது. ‘நானும் ஒரு ஆள்தான், என்னையும் கொஞ்சம் ஏறிட்டுப் பாருங்களேன்’  என்று தமிழின ஆர்வலர்கள் முன்பு தன்னை நெளித்து வளைத்து காண்பித்துக் கொண்டிருக்கிறது வினவுக்கும்பல்.   காங்கிரஸோடு, பா.ஜ.க.வோடு, சி.பி.எம்மோடு எல்லாம் தமிழின ஆர்வலர்கள் உறவு கொண்டாடியதை நினைவூட்டி ‘உச் ’ கொட்டிக்கொள்கிறது. இந்த நெளிப்பும், வளைப்பும் சும்மா ஒன்றுமில்லை. சர்வதேச பாட்டாளி வர்க்கச் சுடரை தமிழகத்தில் ஏற்றிப் பிடிப்பதற்காக. அட அரைவேக்காடுகளா, உங்களுக்கு ஏன் வேர்க்கிறது, எங்கே வேர்க்கிறது என்பதுதான் தெரிகிறதே. மக்கள் பிரச்சினைகளைப் பேச, முன்வைக்க பாராளுமன்றத்தை பயன்படுத்தும் மார்க்சிஸ்டுகள் தேர்தல்களின்போது வைத்துக்கொள்ளும் தொகுதி உடன்பாட்டை காலமெல்லாம் கிண்டல் செய்யும், இந்த வினவுக்கும்பல் இப்போது யாரோடு கைகோர்க்க, கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறதாம்? சமீபகாலமாக தமிழ் இன உணர்வுகளைத் தூண்டி வரும் சக்திகளோடு! வை.கோ, ராமதாஸ், பழநெடுமாறன் போன்றவர்களெல்லாம்  இப்போது இந்தக் கும்பலுக்கு இனிக்கும் ‘தமிழின ஆர்வலர்களாம்!’  மே.வங்காளத்தில் மார்க்சிஸ்டுகளை எதிர்க்க மம்தாவோடு கூட்டணி வைத்தவர்களின் முகங்கள் தமிழகத்தில் இப்படியாகத் தெரிகின்றன.முல்லைபெரியார் போராட்டத்திற்கு தீர்வு என்று போகிற போக்கில் காமடியாக இப்படி சொல்லி போகிறது வினவு கட்டுரை ஒன்று:


1. அரை முதலாளித்துவ நிலபிரபுத்துவ தரகு இந்திய அரசு அம்மாநில அரசு மீது இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 


2. இந்தியாவில் இருந்து பிரிந்து போய்விடவேண்டும்.


3. தமிழக ஆறுகள் வழியே கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரை தறாமல் குறுக்கே படுத்துக்கொள்வது.


4. நடந்த செல்பவர்கள் , சைக்கிளில் போகிறவர்களை தடுத்து நிறுத்து


5. கேரளத்துக்குச் செல்லும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தை மறித்து மகஇக கொடியை நட்டுவைப்பது.
இந்த வினவுக் கும்பலும் கம்யூனிஸம் பேசுகிறது. அதுதான் சகிக்க முடியாததாய் இருக்கிறது. உண்மை போலும் கயமை!.


Saturday, May 21, 2011

வினவு மாமாவும்... ஏஜென்ட் மம்தாவும்.....


மேற்குவங்கத்தில் ஆட்சி மாறியதை தமிழகத்தில் ம.க.இ.க போன்ற இன்டர்நெட் புரட்சியாளர்கள் மிகவும் சந்தோஷத்துடன் கொண்டாடுகின்றனர். இவர்கள் டுபாக்கூர் புரட்சியாளர்கள் மட்டுமல்ல மம்தாயிஸ்டுகளின் தமிழக வார்ப்பாகவும் இருக்கிறார்கள். அங்கு 34 ஆண்டுகள் மக்களின் அடிப்படை வாழ்வியல் முன்னேற்றத்திற்காக உழைத்த இடதுசாரி ஊழியர்களின் படுகொலைகளை கொஞ்சமும் கண்டு கொல்லாமல் மார்க்சிஸ்டுகளின் எதிர்ப்பை மட்டுமே முதன்மையாக வைத்து பரிதாபமாக அரசியல் நடத்தி வருகின்றனர்.

நிலபிரபுத்துவ முதலாளித்துவ அரசியல் ஏஜென்ட் மம்தாவின் வெற்றி இவர்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. அமெரிக்க ஆதரவுடன் மம்தாவும் மாவோயிஸ்டுகள் என்ற கூலிக்கு மாரடிக்கும் கொலை பட்டாளமும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்களை நூற்றுக்கணக்கில் படுகொலை செய்ததை இவர்கள் மார்க்சிஸ்டுகளின் ரவுடியிஸமாக வடிவமைத்தனர். நிலசீர்திருத்தம் செய்து மக்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றிய மார்க்சிஸ்டுகளை வெல்ல முடியாமல் தவித்த மம்தா, அந்த மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என கூப்பாடு போட்டார். ஒட்டுண்ணி காங்கிரஸ் அதற்கு மத்திய அரசிலிருந்து ஆதரவு அளித்தது. தொழிற்சாலைகள் துவக்க அந்த இடது முன்னணி அரசு முயற்சி எடுத்த போது உழைப்பளிகளின் நிலங்களை பிடுங்குவதாக அபாண்டமாக பழி கூறினர். அங்குள்ள முதலாளித்துவ ஊடகங்கள் ஒவ்வொரு நிமிடமும் இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விட்டனர்.

சிங்கூரும் நந்திகிராமும் நல்ல வாய்ப்பாக அவரக்ளுக்கு அமைந்தது. இப்பிரச்சனையை வைத்து கொடூரமக படுகொலைகளை அரங்கேற்றினர். மத்திய காங்கிரஸ் அரசு இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியது. இந்தியா முழுவதும் அந்த ஆட்சிக்கு எதிராக கடுமையான பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த ஊடகங்களின் எச்சத்தை தமிழக இணைய புரட்சியாளர்களான "டுபாக்கூர் வீரர்கள்" ம.க.இ.க போன்றோர்கள் அப்படியே வாந்தி எடுத்தனர்.

மேற்கு வங்கத்தில் கொள்ளையடித்த நிலங்களை இழந்த நிலக்கிழார்களும், கொள்ளை லாபம் அடிக்க முடியாத முதலாளிகளும், கள்ள சந்தைகாரர்களும் ஒன்றினைந்து ஒரு மக்கள் ஆட்சியை வீழ்த்தி உள்ளனர். இப்போது ஒரு தேவதூதனாக மம்தாவை சித்தரிக்கின்றனர். இப்போதும் பல லட்சம் மக்கள் ஆதரவு உள்ள ஒரு இயக்கத்தை மொத்தமாய் அழிக்க முயற்சிக்கின்றனர். மம்தா வெற்றி அடைந்ததும் அவரகள் படுகொலைகளை துவக்கி விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களும் ஊழியர்களும் கொடூரமாக படுகொலை செய்யப்படுகின்றனர். அரசியல் படுகொலைகளை காங்கிரஸ் கட்சி 1977 இல் செய்ததை போல இப்போது மம்தா துவக்கி உள்ளார்.

ஒன்று மட்டும் நிச்சயம் வரலாற்று பக்கம் எப்போது இத்தகைய கொலைகாரர்களை விரட்டிய வரலாற்றைதான் பதிந்து வைத்திருக்கிறது. இவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை. மக்களுக்காக பல தியாகங்களை செய்த மார்க்சிஸ்டுகள் மீண்டும் எழுவார்கள் முன்பைவிட வீரியத்துடன். தமிழகத்தில் மார்க்சிஸ்டுகள் ஒழிந்துவிட்டதாக ஓலமிடும் டுபாக்கூர் புரட்சியாளர்கள் கொஞ்சம் பொறுத்திருப்பது அவசியம். துரோகத்தால் வீழ்த்தப்பாட்டர்களே ஒழிய மார்க்சிஸ்டுகளை அங்கு மம்தா மற்றும் மத்தாயிஸ்டுகளான மாவோயிஸ்டுகளும் ஒட்டுண்ணி காங்கிரசும் நேர்மையாய் வெற்றி கொள்ளவில்லை என்பதை நினைவில் வைப்பது அனைவருக்கும் நல்லது.

சிபிஎம் என்ற கட்சி இல்லை என்றால் இந்த மகஇக கூட்டத்தை ( 5பேர்தான்) எப்போதும் இப்படி வெளிப்படையாக செயல்பட விடமாட்டார் நமது இந்திய முதலாளிகள் பின்லேடனுக்கு ஏற்பட்ட கதி ஏற்படும் என்பதையும் மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.

நன்றி

Thursday, May 5, 2011

இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை: மாவோயிஸ்ட்டுகள் வெறிச்செயல்மால்கன்கிரி மாவட்டத்திலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு வைத் துத் தகர்த்தனர். மேலும், 3 நாள்களுக்கு முன்னதாக கிராமத்தலைவரின் மகனை உயிருடன் கொளுத்தினர் என்று அதிகாரிகள் வட் டாரம் தெரிவித்தது.

50க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்டுகள் நிலிகுடா கிராமத்தில் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பஞ்சாயத்து அலுவலகத்தை வெடிவைத்துத் தகர்த்தனர். இக்குண்டு வெடிப்பினால் இரண்டு மாடிக் கட்டடமான பஞ்சாயத்துக்கட்டடம் பலத்த சேதமடைந்தது. முன்ன தாக, ஞாயிற்றுக்கிழமையன்று, கிராமத்தலைவரின் மகனைப் பலமாகத் தாக்கிய மாவோயிஸ்ட்டுகள், அவரை உயிருடன் தீவைத்துக் கொளுத்தினர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவரின் குடும்பத்தினர் அச்சத்தின் காரணமாகப் புகார் அளிக்க வில்லை. அலுவலர் களுக்கு 3 நாட்கள் கழிந்த பின்னரே தெரிந்தது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Monday, March 21, 2011

தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!


ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. திண்ணை நக்சலிசவாதிகளின் கட்சித் திட்டம் அபத்தங்களைக் கொண்ட கலவையாகவே உள்ளதை இதனை படிக்கும் யாரும் உணர்ந்து கொள்ள முடியும்! இந்நிலையில் அவர்களது யுத்த தந்திரம், நடைமுறைத் தந்திரம் எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்களாகவும், உயிர்பில்லாத பிணவாடை அடிப்பதாகவுமே உள்ளது. மேலும் 1969க்கு பிறகு நக்சலிசம் என்றபெயரில் உருவான திரிபுவாத தத்துவத்தின் மற்றொரு வாந்தியெடுப்பாகவே TNOC யின் திட்டம் உள்ளது.

(சி.பி.ஐ.-எம்-எல்) TNOC.யின் திட்டம் 31வது பிரிவு இந்தியாவில் உள்ள ஆளும் கட்சிகள் பற்றி ஒரு பெரிய பிரசங்கமே செய்கிறது. இதனை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

"ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகள் என்ற பெயர்களிலும் பல்வேறு கூட்டணிகளாகவும் வரும் இந்திரா காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஜனதா, ஜனதாதளம் போன்ற கட்சிகள் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் - நிலப்பிரபுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கக் கட்சிகளாகும். இவைகள் அரசு எந்திரம் போன்று தாக்கி அழிக்கப்பட வேண்டியவையாகும். "
"தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகள் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்ய எப்போதும் காத்திருப்பவை; பரந்துபட்ட மக்களைத் தம்பின்னே திரட்டி ஆளும் வர்க்கங்களின் சேவையில் வைக்கும் இவை புரட்சிக்கு எதிரான பாத்திரமாற்றுகின்றன. "

அதாவது இந்திய சுதந்திரப்பேரில் தலைமை தாங்கிய பெரு முதலாளித்துவ காங்கிரஸ் தலைமை ஆட்சி அதிகாரத்தை தன் கைக்கு மாற்றிக் கொண்டபோது இந்தியாவின் ஏகபோக கட்சியாக மலர்ந்தது. சர்வ அதிகாரங்களையும் கொண்ட ஏகபோக கட்சியாக அரியணையில் அமர்ந்தது. நேரு முதல் இந்திரா வரை அன்றைய பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த அவர்களால் முதலீடு செய்ய முடியாத பெரும் தொழில்களை பொதுத்துறையாக மாற்றி சேவை செய்தது. இதனை சோசலிச கருத்தாக்கத்தோடு இணைத்தும் கொண்டது. எனினும் இதற்காக பெரும் உதவிகளை செய்தது சோவியத் யூனியன் - இது வேறு விசயம்...
இவ்வாறு ஆட்சியதிகாரத்தின் உச்ச நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி அதன் தொடர்ந்த முதலாளித்துவ கொள்கையால் சுதந்திர இந்திய மக்களை காப்பாற்ற முடியாமல் படிப்படியாக திவால் ஆனது. பின்னர் இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தபின்னணியில் அதன் பல மாநிலங்கள் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து வேறு பல மாநில முதலாளித்துவ கட்சிகளுக்கு தலைமை மாற்றப்பட்டது.

இந்த வளர்ச்சியின் வழியாக இடையில் வந்த ஜனதா (இதற்குள் இன்றைய பா.ஜ.க. - ஜனசங்கம் ஒளிந்துக் கொண்டிருந்தது.) பின்னர் இக்கட்சியும் இருந்த இடம் தெரியாமல் சிதறிப்போய் காற்றில் கலந்தே போய்விட்டது. அதேபோல் அதன் அடுத்த வாரிசாக தோன்றிய ஜனதா தளமும் முடக்குவாத நோய் ஏற்பட்டு மரணித்து விட்டது. அதாவது, தற்போது ஜனதாவும், ஜனதா தளமும் முற்றிலும் மறைந்து அதற்கு கல்லறைக்கே அனுப்பப்பட்டு விட்டது இந்திய உழைப்பாளி மக்களால்.ஆனால், பாவம் இந்த ம.க.இ.க. கும்பல் செத்துபோன ஜனதா கட்சியையும், ஜனதா தளத்தையும் உயிர் கொடுத்து மீண்டும் தாக்கி அழிக்கப்படப்போகிறதாம்!

காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை என்ன? தனியொரு ஜாம்பவானாக வலம் வந்த காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மாநில கட்சிகளின் கை - கால்களைப் பிடிக்காமல் ஏன் இடதுசாரிகளின் காற்றுப் படாமல் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலைக்கு தேய்ந்து போய்விட்டது - அந்த கட்சியையும் முற்றிலும் செலிழக்க வைத்து அது தோன்றிய இடத்திற்கே செல்ல வைப்பதற்கான முயற்சியை சி.பி.எம். உட்பட இடதுசாரி - மதச்சார்பற்ற கட்சிகள் முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றன.

மேலும் பா.ஜ.க. என்ற விஷ ஜந்து இந்திய மக்களின் இரத்தங்களை மதவெறி என்ற பெயரால் குடித்து ஊதி பெருக்க நினைக்கும் அட்டையாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கட்சியின் ஆட்சிக் கனவும் வெறும் கனவாக மாற்றியதற்கு முழு சொந்தக்காரர்கள் மதச்சார்பின்மையை தங்களது உயிர் நாதமாக போற்றும் இந்திய மக்களே. இந்த விஷ ஜந்துவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அதனை செயலாக்கி வருவது சி.பி.எம். உட்பட்ட இடதுசாரி ஜனநாயக சக்திகளே. இதில் ம.க.இ.க.-எஸ்.ஓ.சி. எல்லாம் வெறும் பத்திரிகை கூச்சலோடு நின்று விட்டதைதான் இந்திய மக்கள் கண்டுள்ளனர். இந்த போலி நக்சலிசவாதிகள் குறைந்த பட்சம் இந்த மதவாத - பா.ஜ.க.வை விரட்டுவதற்கு கூட துரும்பைக் கூட எடுத்து வைக்கவில்லை.

ஆக மொத்தத்தில், இவர்களது கட்சித் திட்டம் எதிர் காலத்தில் எந்த கட்சிகளை தாக்கி அழிக்க வேண்டும் என்று கனா கண்டுக் கொண்டிருக்கிறதோ? அதனை இந்திய உழைப்பாளி மக்கள் எப்போதோ செய்து முடித்து விட்டார்கள். அதன் மிச்ச மீதியையும் விரைவில் புதை குழிக்கு அனுப்புவார்கள்.

இந்த உண்மையைக் கூட அறியாத அப்பாவித் தலைமையாக ம.க.இ.க. மறைமுகத் தலைமை இருப்பதைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? குறைந்த பட்சம் அவர்களது நகல் திட்டத்தையாவது தற்போதைய சூழலுக்கு ஏற்ப அப்டேட் செய்யலாம். மொத்தத்தில் இது பழைய மொந்தையில் உள்ள பழைய கல்லே தவிர வேறல்ல!

இந்த வரிசையில், பல்லாண்டுகளாக இந்திய ஜாதியடிமைத்தனத்தின் விளைவாக ஒடுக்ப்பட்டு ஓரம் கட்டப்பட்டு தீண்டத்தகாதவர்களாக மாற்றிய தலித் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காக அன்றாடம் உயிர்ப்பலிக் கொடுத்து, தியாகம் செய்து வருகையில் அவர்களைப் பற்றி ம.க.இ.க. மறைமுகத் தலைமையான எஸ்.ஓ.சி.யின் திட்டம் கீழ்கண்டவாறு கூறுவதை ஆழ்ந்து படியுங்கள். அப்போதுதான் தெரியும் இவர்களது உண்மை முகம் என்னவென்று?

".... தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும், கட்சிகளும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளாகக் கருதப்பட வேண்டும். இவைகள் அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத வெறிகளைத் தூண்டி சலுகைகளுக்காகப் போராடும் கட்சிகள் எதிரிக் கட்சிகளாகும். "

தாழ்த்தப்பட்டோரின் துயரமான வாழ்க்கைக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக டாக்டர் அம்பேத்கார், ஜோதிபா பூலே, இரட்டை மலை சீனிவாசன் உட்பட தலித் மக்களின் விடுதலைக்காக போராடிய தலித்தலைவர்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கினார்கள். அவர்களது வழிவந்த அமைப்புகள் இன்றைக்கும் நாடு முழுவதும் தலித் எழுச்சிக்காக பெரும் குரலெழுப்பி வருகின்றன. மேலும், சுதந்திர இந்தியாவில் குறைந்தபட்சம் கிடைத்த கல்வியறிவால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் உந்தப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க அமைப்பாக திரள்கின்றனர். இவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை மையமாக வைத்து பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததிய மக்கள் நல அமைப்புகள்... பழங்குடியின அமைப்புகள் என பல கட்சிகள் நாடு முழுவதும் தோன்றியுள்ளன. இந்த கட்சிகளின் தோற்றம் பல்லாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களிடையே புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது.

மேலும் ஜாதி அடிமைத்தனத்தின் விளைவாக - நிலப்பிரபுத்துவ பண்ணையடிமைத்தனமான சுரண்டலின் விளைவகவும், மனு அதர்த நால்வருண ஜாதியமைப்பு முறையாலும் ஒடுக்கப்பட்ட இம்மக்கள் உழைப்பாளி மக்களின் வரிசையில் உள்ள மிக கடைசிப் பிரிவினராகவே உள்ளனர்.வர்க்க ரீதியாகவும் - ஜாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலித் அமைப்புகளையும், கட்சிகளையும் - குட்டி பூர்ஷ்வா கட்சிகள் என்று அடையாளப்படுத்துகிறது ம.க.இ.க. அறிவுக் கொழுந்து தலைமை! ஆஹா இந்தியாவில் உள்ள 25 கோடி தலித்துக்கள் எல்லாம் எப்படி குட்டி முதலாளிகளானார்கள் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். ஒருவேளை இவ்வாறு சித்தரிப்பதன் மூலம் அவர்கள் பிரச்சினைகளை கண்டுக் கொள்ளாமல் ஓடி ஒளிந்துக் கொள்ளலாம் என்று கருதுகிறது போலும். இந்தக் காரணத்தால்தான் இவர்கள் இடஒதுக்கீடு பிரச்சினையில் எதிர்ப்பு நிலையை மேற்கொண்டு தங்களது பார்ப்பனீய முகத்தை வெளிக் காட்டிக் கொண்ட அவலத்தை பல தமிழ் அமைப்புகள் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது.

அதே சமயம், தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகளாம்! அதாவது, தி.மு.க. - அண்ணா தி.மு.க.வுக்கு எந்த வர்க்க நலனும் இல்லையாம்! இந்த மாநிலக் கட்சிக்குள் ஒளிந்துக் கொண்டிருப்பது மாநில முதலாளிகளை பிரதிநிதித்துப்படுத்தும் நிலைபாடுகளே! தற்போது இதனையும் மீறி இவர்கள் பெரு முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளதையும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை காணத் தவறுகிறது! ஆசியாவில் முதல் பணக்காரர்கள் வரிசையில் திராவிட இயக்கத் தலைமை இருப்பது குறித்து அறிந்து கொள்வதற்கு கண்ணாடி ஏதும் தேவையில்லை!

நிலைமை இவ்வாறிருக்க தலித் உழைப்பாளி மக்களை குட்டி பூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க. மறைமுகத் தலைமையிடம் எந்தவிதமான கொள்கைத் தெளிவும் - வர்க்கத் தெளிவும் இல்லாததைதான் காட்டுகிறது! இவர்களது இந்த தலித் விரோத நிலைபாடுகளே இவர்கள் பார்ப்பனீயத்தின் பின்னணியாக - ஏகாதிபத்திய சீர்குலைவாதிகளாக செயல்படுவதற்கு சாட்சியாக விளங்குகிறது.

சந்திப்பு

http://santhipu.blogspot.com/

Wednesday, February 2, 2011

சிபிஜ(மாவோயிஸ்ட்) ஆளும்வர்க்க சேவகர்களே.

சிபிஐ(மாவோயிஸ்ட்) என்று பெயர் வைத்துக்கொண்டு, இடதுசாரி அதிதீவிரவாதத்தையும், அராஜகத்தையும் அரங்கேற்றி வருகின்றனர். சத்தீஷ்கர் ஜார்கண்ட், ஒரிசா, மேற்குவங்கம், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் நடத்திய கொடூரகொலைகள் மூலமாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளனர். அரசியல் எதிரிகளை கொலைசெய்வது, அடிமட்ட வனஅலுவலர்கள், நில மற்றும் காவல் அலுவலர்களை கொலைசெய்வது, கடத்துவது, கொள்ளையடிப்பது மற்றும் அரசியல் கட்சிகளிடையே கூலிப்படையாக செயல்படுவது, இவர்களது முக்கிய நடவடிக்கையாக மாறிஉள்ளது. இவர்களாலும், இவர்களது நடவடிக்கைகளாலும் உழைக்கும் மக்களின் ஒற்றுமையோ, முன்னேற்றமோ சாத்தியமில்லை. ஆளும் வர்க்க அடக்குமுறைகளிலிருந்து அப்பாவி மக்களை காப்பது, புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்கிறது. இவர்களது தெளிவற்ற திட்டமும், தேவையற்ற வன்முறையும் ஆளும் வர்க்கத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் வலுசேர்ப்பதாகவே உள்ளது. மேலும் இவர்கள் வெகுமக்களை அணிதிரட்டியுள்ள இடதுசாரி இயக்கத்தின் மீது நடத்தும் தாக்குதல் இவர்களது ஆளும் வர்க்க எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்துக்கிறது. இவர்களை தோற்கடிப்பது வெறும் நிர்வாக நடவடிக்கைகள் மூலம் சாத்தியமில்லை. அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி வெகுமக்களிடமிருந்து தனிமைப்படுத்தவேண்டும். அதே நேரத்தில்இவர்களதுகோட்பாடு,திட்டம்,நடைமுறைத்தந்திரத்தில்உள்ளஇடது
குறுங்குழுவாதத்தையும்,அராஜகவாதத்தையும் தோலுரித்துக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.

புதிதல்ல..பழைய கள், பழைய மொந்தை

இடது குறுங்குழுவாதம் இந்திய கம்யூனிச இயக்கத்திற்கு புதிதல்ல. 1948-51ம் ஆண்டுகளில் உருவான ஒரு போக்கு, இந்திய சுதந்திரம் உண்மையான சுதந்திரம் அல்ல. இந்திய ஆளும் வர்க்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள். எனவே புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. அது தோல்வியடைந்த ஒன்று. அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியால் கைவிடப்பட்டது. மீண்டும் 1967-68 ல் நக்சலிசம் என்ற பெயரால் இடது குறுங்குழுவாதம் தலைதூக்கியது. 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) அமைக்கப்பட்டு அதன் 7வது மாநாட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தத்துவார்த்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இக்காலத்தில் இம்மாநாடு முடிந்த கையோடு முக்கியத்தலைவர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். விவாதம் முழுமையடையாத சூழல். இதே காலத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வலது திரிபுவாதத்திற்கு எதிராக சரியான நிலை எடுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, இடது குறுங்குழுவாதம் என்ற தவறான பாதை நோக்கி சென்றது, இந்திய அரசு ஏகாதிபத்தியத்தின் ஏஜென்ட் என்று தீமானித்தது. இதே நிலைபாட்டை இந்தியாவில் இருந்த இடது குறுங்குழுவாத சிந்தனையாளர்கஙள், நக்சலைட்டுகள் எடுத்துக்கொண்டு 1970ல் சிபிஐ(எம்.எல்.) என்ற கட்சியை துவக்கினர்.

1969-71ம் ஆண்டுகளில் ஆயும் தாங்கிய போராட்டத்தை துவக்கினர். ஆயுதப்போராட்டத்தின் முக்கிய வடிவம் தனிநபர்பளை அழித்தொழித்தல். இதனால் சில நிலபிரபுக்களும், அதிகாரிகளும் கொலை செய்யப்பட்டனர். தளம் அமைத்து ஒவ்வொரு பகுதியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றனர். ஒரு தீப்பொறி காட்டுத்தீயாக பரவும் என்றனர். ஆனால் அது நடக்கவில்லை. அது அணைந்து விட்டது. மாறாக புரட்சிகரமான வெகுஜன இயக்கம் வளர்வதற்கு இந்த தனிநபர் அழித்தொழித்தல் தடையாக அமைந்தது. இவர்களால் விவசாயிகளை அணிதிரட்ட முடியாதது மட்டுமல்ல, அரசின் அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள முடியாமல் அவர்களால் எழுச்சி என்று அழைக்கப்படுகிற நக்சல்பாரி, கோபிபல்லபூர், ஸ்ரீகாகுளம் போன்றவைகள் தோல்வியில் முடிந்தன. இத்தோல்வியிலிருந்து தங்களது செயல் தளத்தை நகர்புறத்திற்கு மாற்றினர். குறிப்பாக கல்கத்தா மற்றும் புறநகர் பகுதிக்கு வந்தனர். அங்கும் தொழிலாளர்களை வென்றெடுக்க முடியவில்லை. எனவே, வர்க்க எதிரிகளை ஒழித்துகட்டுவது என்ற பெயரால் போக்குவரத்து போலீஸ்காரரையும், சிறு அலுவலர்களையும், பல்கலைக்கழக துணை வேந்தைரையும் கொலை செய்தனர். மேற்கு வங்கத்தில் 1971-ல் காங்கிரஸ் கட்சியின் அரைப்பாசிச ஆட்சி நடந்தபோது அவர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் ஊழியர்களை வேட்டையாடினர். 1972ல் ஆந்திராவில் வாரங்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் குண்டர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் ஊழியர்களை படுகொலை செய்தனர். ஆனால் அவர்களது நகர்புற எழுச்சியும் பிசுபிசுத்துபோனது. ஒன்றுபட்ட கட்சியை அவர்களால் உருவாக்க முடியவில்லை. சிறிய கருத்து வேறுபாடுகளைகூட தீர்க்கமுடியவில்லை. எனவே 1971ல் சிபிஐ(எம்.எல்.) இரண்டாக உடைந்தது. அடுத்தடுத்து பல குழுக்களாக சிதைந்து செயலிழந்தது. ஆதிவாசி மக்களில் ஒரு சிறு பகுதி தவிர இதர விவசாயிகளைகூட திரட்ட முடியவில்லை. ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், பகுதியில் ஆதிவாசி மக்களிடம் இருக்கிற செல்வாக்கை வைத்து இப்போது சிபிஐ(மாவோயிஸ்ட்) என்று வெளிவந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் எதையும் இவர்கள் படிப்பினையாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. உலக மாற்றங்களை கிரகித்து கொண்டதாகவும் தெரியவில்லை. குழப்பத்தினூடே பயணம் தொடர்கிறது.

சுருக்கப்பட்ட ஏகாதிபத்தியம்-மறைக்கப்பட்ட சோசலிசம்

எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தத்துவம், திட்டம், தந்திரோ உபாயம்,நடைமுறைதந்திரம் மிகவும் அடிப்படையானவை. குறிப்பிட்ட நாட்டில் செயல்படும் கட்சிக்கு அத்திட்டத்தில் புரட்சியின் தந்திரோபாயங்கள் கோடிட்டு காட்டப்படவேண்டும். இந்த தந்திரோபாயமும் அந்நாட்டின் பொருளாதாரம், அரசியல் மேல்கட்டுமானம், மற்றும் சமூகம் பற்றிய ஸ்தூலமான ஆய்வின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும். சரியான தந்திரோபாயத்தை உருவாக்க அன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியிலான வர்க்க சேர்மானம் பற்றிய ஸ்தூலமான ஆய்வுகள் அடிப்படையானது. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தது.
மாவோயிஸ்டுகளின் தங்களது திட்டத்தில் மார்க்சிய-லெனினிய மாவோயிச சிந்தனைகள்தான் தத்துவ வழிகாட்டி என்பதை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஏகாதிபத்திய செயல்பாட்டை மிகவும் சுருக்கி முக்கியத்துவமற்ற முறையில் கொடுத்துள்ளனர். வளர்ந்த முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்திசக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சி, இதன்மூலம் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் அவ்வப்போது ஏற்பாடும் பொருளாதார நெருக்கடியை சரிகட்டுகிறது. இத்துடன் கூடவே தொழிலாளர் மற்றும் இதர பகுதி மக்களின் நலன்களை வெட்டிச்சுருக்குவது, வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, வேலைபறிப்பு, நிதிமூலதனத்தால் நாடுகளின் இறையாண்மை பறிக்கப்படுவது போன்ற எண்ணற்ற ஏகாதிபத்திய தாக்குதல் பற்றி மாவோயிஸ்டுகள் திட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் எதுவும் இடம்பெறவில்லை. ஏகாதிபத்தியங்களின் இருமாபெரும் உலக யுத்தங்கள் பற்றியும் அது தேசவிடுதலைப் போராட்டத்தை அடக்கியது பற்றிய நிலைமைகளைகூட குறிப்பிடப்படாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முழுமை பெறுமா?
உலகில் சோவியத் யூனியன் இருந்தது உண்மை. அது தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்தது. மூன்றாம் உலக நாடுகள் சில துறைகளில் சுயமாக முன்னேற ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து நிற்க உதவி புரிந்தது. சோசலிச முகாம் மற்றும் சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு உலக வர்கக சக்திகளின் பலாபலன்களில் மாற்றம் ஏற்பட்டது. ஏகாதிபத்தியத்தின் பலம் அதிகரித்தது. வளரும் நாடுகளை இது கடுமையாக பாதித்துள்ளது. ஆனால் இந்தியவில் உள்ள மாவோயிஸ்ட்கள் பழைய நக்சலைட்டுகளின் பார்வையை தற்போதும் தொடர்கின்றனர். சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்தியம் என்றும் அமரிக்க ஏகாதிபத்தியத்தைவிட ஆபத்தானது என்றும் அறிவித்துள்ளனர். 1956-லேயே சோவியத் யூனியனில் முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டுவிட்டது என்றும் 1976க்கு பிறகு சீனாவும் முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என்றும் அறிவித்தனர். தற்போது அவர்கள் பார்வையில் உலகில் சோசலிச முகாம் இல்லை. ஒரு சோசலிச நாடுகூட இல்லை என்பதுதான். கியூபாவைக்கூட குறிப்பிடத் தயாராக இல்லை. 20ம் நுற்றாண்டின் சோசலிச கூட்டமைப் பையும் அதன் அனுபவத்தையும் பாசீலிக்கக்கூட தயாராக இல்லை. சீனாவில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் கடைபிடித்த வர்க்க ஆய்வு, ஆயுதப்போராட்டம், தந்திரோபாயம், நடைமுறை தந்திரத்தை ஆகியவற்றை அப்படியே இயந்திரகதியாக கடைபிடிப்பதுதான் இவர்களின் உலக அனுபவ சித்தாந்தம், இந்த குறுகிய பார்வை உழைப்பாளி மக்களை சீர்குலைக்கவும், ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யவுமே உதவும்.

ஊனப்பார்வையா? உருக்குலைந்த சிந்தனையா?

உலகப்புரட்சியின் உந்து சந்தி தேசவிடுதலைப்போராட்டம் என்று கூறுகின்றனர். சோவியத் யூனியன் தேசவிடுதலைப் பேராட்ட இயக்கங்களுக்கு அளித்த ஆதரவை ஒருபொருட்டாகவே மதிப்பீடு செய்ய மறுத்தவர்கள், தற்போது தேசவிடுதலைப்போராட்டமே உலக புரட்சியின் பிரதான இருப்பு என்று பறைசாற்றுகின்றனர். இதுதான் ஏகாதிபத்திய எதிர்ப்பின் மையம் என்கிறார்கள். ஆனால் லத்தீன் அமெரிக்க கண்டத்தின் பெரும் பகுதி ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் இருந்து கொண்டருக்கிறது. இதைப்பற்றி இவர்கள் குறிப்பிடவில்லை. மாறாக தற்கால உலகில் தெற்கு ஆசியாதான் தேசவிடுதலைபோரின் கூர்முனையாக உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கு, வடமேற்கு மாகாணம், பகுதிகளிலும் போர்குணமிக்க எழுச்சிகள் வெடித்து கிளம்புகின்றது என்கின்றனர்.இஸ்லாமிய எழுச்சி அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மைகொண்டது. எனவே அது வளரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அறிவிக்கின்றனர். என்ன சிந்தனை இது? மார்க்சிச, லெனினிச, மாவோயிச தத்துவத்தை வழிகாட்டி என்று பறைசாற்றிய மூளையிலிருந்து இப்படி உருக்குலைந்த பார்வையா?

தாலிபான், அல்கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் இதர தீவிரவாதக் குழுக்களின் போராட்ட இலக்கு என்ன? இஸ்லாமிய அரசை நிறுவுவது, அதுவும் மத அடிப்படையிலான ஷரியத் சட்டம், ஜனநாயக அரசியலுக்குத்தடை, பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்தற்கு தடை, பிற்போக்குத்தனமான நிலபிரபுத்துவ நடைமுறைகள், பழக்க வழக்கங்களை கடைபிடிக்க துடிக்கும் அமைப்புகளின் போராட்டத்தை தேசவிடுதலை என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றும் வர்ணிக்கின்றனர், தாலிபானும், அல்கொய்தாவும் அமெரிக்க சிஐஏவால் உருவாக்கப்பட்டு ஆப்கானில் சோவியத்யூனியனுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது இவர்கள் அறியாததா? இவர்களைத்தான் முற்போக்கு முத்திரை குத்தி தங்களது கூட்டாளிகள் என்று பறைசாற்றுகின்றனர்.
இந்த உருக்குலைந்த பார்வை எங்கிருந்து உருவாகிறது? உலக முரண்பாட்டை பற்றிய பலவீனமான மதிப்பீட்டிலிருந்து உருவாகிறது.உலகில் முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம் என்பதும், இன்றைய சகாப்தத்தின் பிரதான முரண்பாடு ஏகாதிபத்தியத்திற்கும்-சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இதுதான் நிருபிக்கப்பட்ட உண்மையும் கூட. மாவோயிஸ்டுகள் பிரதான முரண்பாடாக ஏகாதிபத்தியத் திற்கும்-அடக்கப்பட்டநாடுகள்/மக்கள் ஆகியவற்றிற்கு இடையேயான முரண்பாடுதான் பிரதானமுரண்பாடு என்று தீர்மானிக்கிறது. 1970-80ம் ஆண்டுகளில் நக்சலைட்டுகள் சீன கட்சியிடமிருந்து அவதானித்த மூன்றுலக கோட்பாடுகளிலிருந்து அவர்களது மூளை முற்றிலும் இன்னும் விடுபடவில்லை. அமெரிக்கா-ரஷ்யா என இரு வல்லரசுகள் முதல் உலகம், இதர ஏகாதிபத்திய நாடுகள் இரண்டாம் உலகம், ஜப்பான் தவிர மற்ற ஆசிய, ஆப்பிரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலகம் என்ற நிலையை தொடருகின்றனர். மூன்றாம் உலகம் மற்ற இரு உலகத்தையும் சுற்றி வளைத்து வெற்றிகொள்ள வேண்டுமாம்? காலம் மாறிவிட்டது, வர்க்க உறவுகள் மாற்றம், சீனக்கட்சியே வலியிறுத்தாத கருத்து, இவர்களை சிறைபிடித்து சிக்கவைத்துள்ளது.

தரகு முதலாளியா ? தனித்துவமான முதலாளித்துவமா?

இந்திய சமூகத்தை பற்றி மதிப்பீடு செய்கிறபோது, நவீன காலனித்துவத்தால் மறைமுகமாக ஆளப்படுகிற சுரண்டப்படுகிற, கட்டுப்படுத்தப்படுகிற அரைக்காலனித்துவ, அரைநிலப்பிரவுத்துவ சமூக அமைப்பு என்று கூறுகின்றனர். இது 1939-ல் சீன சமூகம் பற்றிய மதிப்பீட்டை அப்படியே யந்திரகதியாக நகல் எடுப்பதாகும். அன்று சீனா பல ஏகாதிபத்தியத்தால் கூறுபோடப்பட்டிருந்தது. யுத்த பிரபுக்கள் பலர் ஆட்சி புரிந்தனர். மைய்ய அரசு என்பது இல்லை. தேசிய முதலாளிகளைவிட தரகு முதலாளிகள் பலர் ஏகாதிபத்தியத்துடன் உறவு வைத்து செல்வாக்கு செலுத்தினர். அப்படிப்பட்ட நிலை இன்று இந்தியாவில் உள்ளதா? மைய அரசு இல்லாமல் பல ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தையும் தீமானிக்கிறதா? இல்லவேஇல்லை. ஆனாலும் இந்திய அரசியல்,பொருளாதாரம், கலாச்சாரம் ஆளும் வர்க்கம் அனைத்தையும் சுதந்திர இந்தியா என்ற அறிவிப்பு பலகைக்கு பின்னால் இருந்து ஏகாதிபத்தியம் கட்டுப்படுத்துகிறது என்று கண்ணைமூடிக்கொண்டு கூறுகின்றனர். இந்தியாவிற்கு என்று எந்த தனித்துவமும் இல்லை என்பதுதான் இவர்கள் கூற்று.
இந்திய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யக்கூடிய பெரும் முதலாளித்துவ, பெரும் நிலபிரபுத்துவ தலைமையிலான கூட்டு சர்வாதிகார அரசு என்றும், இந்த பெரும் முதலாளிகளும், பெரும் நிலபுரபுக்களும் உண்மையில் தரகு முதலாளிகளே என்று வரையறுக்கின்றனர். தரகு முதலாளி என்பது ஒரு பின்தங்கிய காலனித்துவ நாட்டில் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு வர்த்தக ரீதியில் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து, அவர்களது உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் ஆவர், இவர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடாதவர்கள் ஆவர். இந்திய முதலாளிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களா? அடிப்படை தொழிலான உருக்கு, இயந்திரம், தானியங்கி, துணி, தகவல் தொடர்பு, எண்ணெய், எரிவாயு, பெட்ரோல் என எண்ணற்ற தொழில்களில் இந்திய முதலாளிகள் ஏகபோகமாக உள்ளனர். இந்திய முதலாளிகள் தங்களது சொத்துக்களை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். இருபத்தி இரண்டு ஏகபோக நிறுவனங்களின் சொத்து மதிப்பு 1957ல் 312.63 கோடியாக இருந்தது. இது 1997ல் 500 மடங்கு அதிகமாகி 1,58,004.72 கோடியாக உயர்ந்துள்ளது. பத்து தனியார் கார்பொரேட் நிறுவனங்களின் சொத்து 2003-2004-ல் 3,54,000 கோடியிலிருந்து 2008-ல் 10,34,000 கோடியாக நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இவர்களா தரகு முதலாளிகள்? மாவோயிஸ்டுகளின் தரமற்ற மதிப்பீட்டால்தான் இந்த தவறான முடிவுக்கு வருகின்றனர். இந்திய பெருமுதலாளிகளுக்கு தொழில் அடிப்படை மட்டுமல்ல வர்த்தகம் மற்றும் சேவைத்துறையிலும் பெரும் பங்கு உள்ளது. இவர்களின் நலன்களை பாதுகாக்க பல நேரங்களில் ஏகாதிபத்தியத்துடன் முரண்படுகின்றனர். பல நேரங்களில் ஒத்துப்போகின்றனர். தங்களது சந்தை, சந்தையை பாதுகாக்கும் விஷயத்திலும் உலகச்சந்தையில் பங்கு பெறுவதிலும் மோதல் ஏற்படுகிறது. ஏகாதிபத்திய முதலாளிகளுடன் ஒப்பிடும்போதும், தொழில் நுட்பம் தொடர்பான விஷயம், மூலதன திரட்சி ஆகியபற்றில் ஒத்துப்போகும் தேவை உள்ளது. எனவே இந்திய முலாளித்துவம் இரட்டைத்தன்மை குணமுடையது என்று மார்க்சிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. இவர்களை தரகு முதலாளிகள் என்றோ, கமிஷன் ஏஜன்ட் என்றோ மதிப்பிடுவது எதார்த்த நிலைக்கு பொருந்தாது.

புரட்சியின் கட்டம் + நேச சக்திகள் + தலைமை = குழப்பம்
இந்திய புரட்சியின் கட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்டவாறுவரையறுக்கிறது.இந்தியாவில் முதலாளித்துவம் அதற்கு முந்தைய சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரோ அல்லது சுதந்திரத்திற்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவமோ அதற்கு முந்தைய சமூக அமைப்பை அழித்தொழிக்கவில்லை. எனவே இந்த கடமை தொழிலாளி வர்க்கத்திடமும் அதன் கட்சியின் மீது விழுந்தது. எனவே அனைத்து முற்போக்கு சந்திகளையும் ஒன்றிணைத்து ஜனநாயக புரட்சியை முழுமைபடுத்தி அடுத்த கட்டமாக சோஷலிசத்திற்கு மாறிச்செல்ல வேண்டும்.

ஆனால் மாவோயிஸ்டுகளை பொறுத்தவரை இந்தியா இன்றும் ஏகாதிபத்திய சக்திகள் கீழ் உள்ள அறை காலனித்துவ நாடாகும். எனவே தற்போதைய புரட்சியின் கட்டம் தேசிய விடுதலை அல்லது ஏகதாதிபத்தியத்திற்கு எதிராகவும், அதனுடைய உள்நாட்டு கூட்டாளி நிலபிரபுத்துவத்திற்கு எதிராகவும் பொதுவான ஐக்கிய முன்னணியை கட்டவேண்டும் என்பதுதான். இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக முதலாளிகள் இருப்பார்கள் என்கின்றனர். அதாவது தேசவிடுதலையும், ஜனநாயக புரடசியையும் கலந்து குழப்பிக் கொள்கின்றர். புரட்சியின் கட்டங்களை தெளிவாக வரையறுக்காத எந்த புரட்சியும் பெரும் ஆபத்தையும், கேடுகளையும் விளைவிக்கும்.

புரட்சியின் நேச அணியில் பாட்டாளி வர்க்கம் மைய்யமானது என்றாலும், பணக்கார விவசாயிகள், குட்டி முதலாளிகள், பெருமுதலாளிகள் அல்லாத முதலாளிகள் பற்றிய மதிப்பீடுகள் தெளிவாக திட்டவட்டமாகவும் இல்லை. கிராமப்புற பணக்கார விவசாயிகள் பெரும்பகுதி புரட்சிக்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதி நடுநிலையாகவும், சிறு பகுதி எதிரிகளுடனும் அணி சேருவர் என்று மதிப்பீடு செய்கின்றர். எதை அடிப்படையாக வைத்து இந்த மதிப்பீடு வருகிறது ? நிலபிரபுக்கள், பணக்கார விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், பெரும் வணிகர்கள்தான் கிராமப்புறபணக்காரர்களின் அச்சாக உள்ளனர். இவர்களிடம் ஊசலாட்ட தன்மை இருக்கும், ஆனால் புரட்கிரமான சூழல் ஏற்படும் தறுவாயில்தான் இவர்கள் யார் பக்கம் இருப்பார்கள் என்று தீர்மானிக்க முடியும். மாவோயிஸ்டுகள் இப்போதே ஜோசியம் பார்ப்பதுபோல் அறிவிப்பது அபத்தமானது. இதேபோன்று குட்டி முதலாளிகள் பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கையான கூட்டாளி என்று மொட்டையாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. குட்டி முதலாளித்துவத்தின் ஒரு பகுதியினர், முதலாளித்துவ பாதையாலும், நவ தாராளமய கொள்கையாலும மேன்மையும் , பலனும் அடைந்துள்ளது. இதனால் இவர்கள் படகை புரட்சிகர இயக்கத்தின் பக்கம் செலுத்துவதைவிட ஆளும் வர்க்கம் பக்கமாக செலுத்தவே அதிக வாய்ப்புள்ளது.

ஜனநாயக புரட்சிக்கு பாட்டாளிவர்க்கத்தலைமை பற்றி மாவோயிஸ்டுகள் தங்களது திட்டத்தின் பேசுகின்றனர். ஆனால் தொழிலாளா வர்க்கம் மத்தியில் வேலை செய்வது, அணிதிரட்டுவது சிறிதளவு கூட இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டாமல் எப்படி தொழிலாளிவர்க்கம் தனது தலைமைபாத்திரத்தை நிறைவேற்றமுடியும்? மக்கள் யுத்தத்தின் அடிப்படை உந்து சக்தி விவசாயிகள். கிராமப்புறங்களை விடுவித்த பிறகுதான் நகர் புற விடுதலை என்ற பழைய சித்தாந்த திட்டத்திலிருந்து மீளவில்லை. ஜனநாயக புரட்சியின் தலைமை பாத்திரம் பற்றி வார்த்தைகளில் உள்ளது, நடைமுறையில் பழைய செயல்முறைகளே.

மக்கள் யுத்தமா ? அபத்தமா ?

இன்றைய புரட்சியை வெற்றிகரமாக மாற்றுவதற்கு மாவோயிஸ்டுகள் நம்பும் ஒரே தந்திரம்நீண்ட கால மக்கள் யுத்தம் என்பதாகும்.நம்மை போன்ற நாட்டில் புரட்சியின் தொடக்கம் ஆயுத போராட்டம் மூலமாகவே நடக்கும் மற்ற அனைத்து போராட்டங்களும் இதற்கு உறுதுணையாகவே அமைய வேண்டும்.
தொழிலாளர்கள், நகர்புற ஏழைகளை அணிதிரட்டாமல் கிராமப்புறத்தில் கூட விவசாயிகளை அணிதிரட்டாமல் ஆயுத போராட்டம் எப்படி சாத்தியமாகும்? வெற்றி பெறும்? அவர்களின் 40 ஆண்டுகால அனுபவத்தில் விவசாயிகளை அவர்களது அடிப்படையான கோரிக்கைகளுக்காக கூட திரட்டமுடியாதவர்கள் ஆயுதப்போராட்டத்திற்கு வருவார்களா?
இதே காலத்தில் ஆளும் வர்க்க அரசு கட்டமைப்பின் அசுர வளர்ச்சியை துளிகூட கணக்கில் எடுக்கவில்லை. ஏங்கல்ஸ் 1848-ல் அரசு இருந்த நிலைமையில் தடையரண்போராட்டங்கள் பலமாக இருந்தது. இது 1895-ல் நிலைமைகள் மாற்றம் ஏற்பட்டு அரசு பலத்தை கூட்டியுள்ளதை கணக்கில் எடுக்கவேண்டும் என்று ஜம்பது ஆண்டுகால அனுபவத்தை துல்லியமாக மதிப்பிடுகிறார். ஆனால் இந்திய மாவோயிஸ்டுகள் இந்திய அரசின் தகவல் வளர்ச்சி. போக்குவரத்து, மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், பலமான ராணுவம் என அரசின் அசுர வளர்ச்சிபற்றி சிறிதும் கணக்கில் எடுக்காத கனவுலக திட்டமாக ஆயுத போராட்டம் என்று அறிவிக்கின்றனர். எனவேதான் இவர்களது மக்கள் யுத்தம் என்ற பெயரால் நடத்துகிற தனநபர் அழித்தொழித்தல் திட்டம், அரசியல் எதிரிகளையும் அடிமட்ட அரசு ஊழியர்களையும் நோக்கி பயன்படுத்தப்படுகிறது. அவர்களை மட்டுமே படுகொலை செய்கின்றனர். விவசாய புரட்சிகளின் எதிரிகளாக இருக்கக்கூடிய நிலபிரபுக்களையோ அல்லது பெருமுதலாளிகளையோ இவர்கள் அழித்தொழித்ததாக வரலாறு இல்லை. காரணம் இவர்களுடன் நெருக்கமான உறவு உள்ளது. மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் 2009-ல் தனது பேட்டியில் நாங்கள் தொழில் நிறுவனங்களிடமும், பெருமுதலாளிகளிடமும் பணம்வசூலிக்கின்றோம், இதில் ஒன்றும் தவறில்லை. அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்கவில்லையா? என்று கேட்கின்றார். வர்க்க எதிரிகளிடமே சரணாகதி அடைந்துவிட்டு யாருக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்துகின்றனர்? இவர்களது ஆயுதக்குழு சில தாக்குதல்களை நடத்திவிட்டு காடுகளுக்குள் ஒளிந்து கொள்ளும், அதன்பிறகு அரசுபடைகள் அங்குள்ள ஆதிவாசிமக்களை வேட்டையாடும்போது அவர்களை பாதுகாக்க முடியாத கையறு நிலையாக இருப்பார்கள். இதுதான் சட்டிஸ்கர், ஜார்கன்டில் நடந்து வருகின்றது. ஒரிசாவில் விஎச்பி தலைவரை 2008-ல் படுகொலை செய்துவிட்டு காடுகளில் ஒளிந்துகொண்டனர். இதன்பிறகு பல ஆயிரம் கிறிஸ்துவ மக்கள் வேட்டையாடப்பட்டனர், வீடுகளையும், வழிபடும் இடங்களை இழந்தனர். இதுதான் இவர்களது ஆயுதப்போராட்டத்தின் அன்பளிப்பு ?

பூனை கண்ணை மூடிக்கொண்டால்..

தேர்தல் மற்றும் ஜனநாயக நடவடிக்கை பற்றி யெல்லாம் மாய உலகத்தில்தான் மாவோயிஸ்ட்கள் சஞ்சரிக்கின்றனர். தேர்தல் வரும்போது புறக்கணிப்பை அறிவிப்பார்கள். தேர்தலில் பதிவாகாத வாக்குகளை தங்களது வெற்றி என்று அற்பமான முறையில் பறைசாற்றி கொண்டாடுவார்கள்.2009-ல் சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மராட்டியத்தில் சுமார் 50 சதமான வாக்குகள்தான் பதிவானது என்பதை சுட்டிக்காட்டி, வாக்களிக்காதவர்கள் மாவோயிச அழைப்பிற்கு செவிசாய்த்தனர் என்றனர். ஒரு பத்திரிக்கையாளர் கேட்டதுபோல் பம்பாயில் 57 சதமான மக்கள் வாக்களிக்கவில்லை, இவர்கள் எல்லாம் மாவோயிச ஆதரவாளர்களா? என்றார். கண்ணை மூடிக்கொண்ட பூனைக்கும், மாவோயிஸ்டுகளின் தேர்தல் புறக்கணிப்பு மதிப்பீடும் ஒன்றுதான்.

பாராளுமன்றமும் இதர ஜனநாயக அமைப்புகளும் புரட்சிகர முன்னேற்த்திற்கு தடையானது என்றும், அவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும் மாவோயிஸ்டுகள் வாதாடுகின்றனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அனைவருக்கம் வாக்குரிமை மற்றும் பாராளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் உழைப்பாளி மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு ஒரு கருவியாகவும், அவர்களது நலன்களை பாதுகாக்கவும் பயன்படுத்திட வேண்டும் என்றும் மதிப்பிட்டு செயல்படுகிறது. முதலாளித்துவ வர்க்க ஆட்சியில் பாராளுமன்ற முறையில் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அது பயன்படுகிறது. இன்றைக்கும் பாராளுமன்றத்திற்கு சுரண்டும் வர்க்கத்திட மிருந்துதான் ஆபத்து வருகிறது என்பதை மாவோயிஸ்டுகள் உணர மறுக்கின்றனர். சோவியத் யூனியனில் ஜனநாயகத்தை ஆழப்படுத்தாமல் சோசலிச தன்மைகள் மீறப்பட்டதால் அதிகாரவர்க்கப்போக்கும், அரசு கட்சி வேறுபாடின்றி செயல்பட்டதும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டனர் என்பதைகூட இந்த மாவோயிஸ்டுகள் பாடமாக கற்க தயாராக இல்லை. ஏன் பக்கத்து நாட்டு நேபாளத்தில் உள்ள மாவோயிஸ்ட்கள் குறிப்பிட்ட அரசியல் சட்டத்தின் கீழ் பல கட்சி ஆட்சிமுறையை பயன்படுத்துவது என்று முடிவுக்கு வந்து செயல்படுகின்ளனர்.அதைகூட பாடமாக இவர்கள் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை.

வடகிழக்கு மாகாணத்திலும், காஷ்மீரிலும் பிரிவினை வாத இயக்கத்தை இவர்கள் தேசிய இனவிடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கின்றனர். அவர்கள் பிரிந்துபோவதை எதிர்க்கதேவையில்லை என்று கூறுகின்றனர். தேசிய சுயநிர்ணய உரிமையை மொத்த சூழ்நிலையுடன் பொருத்தாமல் இயந்திரகதியாக பேசுகின்றன. 1840-ல் காரல் மார்க்ஸ் போலந்து மற்றும் ஹங்கேரி தேசிய இயக்கத்தை ஆதரித்தார். காரணம் ருஷ்ய மற்றும் ஆஸ்திரிய பேரரசின் அடக்கு முறைகளை எதிர்த்து நின்றதுடன் அவர்களது அரசியல் ஜனநாயகம் ஐரோப்பிய தொழிலாளிவர்க்கத்திற்கு அடிப்படை தேவையாக இருந்தது. அதே நேரத்தில் ரஷ்ய ஜார் மன்னருக்கு ஆதரவாக எழுந்த செக் மற்றும் தெற்கு ஸ்லாவ் இயக்கத்தை எதிர்த்தார். காரணம் இது தொழிலாளி வர்க்கத்திற்கு பாதகமானதாக இருந்தது. எனவே ஒட்டுமொத்த ஜனநாயக இயக்கத்துடன் ஒப்பிட்டுத்தான் தேசிய சுயநிர்ணய உரிமை கணக்கில் எடுக்கப்படவேண்டும். காஷ்மீர் தனியாக செல்வது, அல்லது பாகிஸ்தானுடன் செல்வது என்பது அமெரிக்க ஏகாதிபத்யம் காலுன்ற அதிலும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்கான் நாடுகளில் தலையிட தளமாக அமையும் என்பதை இன்றைய சர்வதேச அறிவுள்ள எவரும் கணிக்கமுடியும். ஆனா மாவோயிஸ்டுகள் இதை பார்க்க மறுக்கின்றனர். ஆயுதம் தாங்கிய அனைவரும் போராளிகள், விடுதலையாளர்கள் என்று மட்டமாக மதிப்பிடுவது விஞ்ஞான பார்வையல்ல.
மாவோயிஸ்டுகள் தாக்குதளின் இலக்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பது சமீபத்திய விபரங்கள்கூட நிரூபணம் செய்கிறது. சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் ,மாநிலத்தைவிட மேற்குவங்கத்தில் 57 சதம் ஆதிவாசி மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. 1,76,668 ஆதிவாசிகளுக்கு 1,97,350.39 ஏக்கர் நிலம்பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.இதே பகுதியில் 2009 பாராளுமன்றத் தேர்தலில் 3 லட்சம் வாக்குகளில் வெற்றிபெற முடிந்தது. மார்க்சிஸ்டுகள் மக்கள் தளத்தை இழந்துவிட்டால் அவர்களை தாக்க வேண்டிய தேவை மாவோயிஸ்டுகளுக்கு இருக்காது. அங்கு மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருப்பதாலேயே அதன் ஊழியர்களை, தலைவர்களை கொலை செய்துவிட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.

ஆளும் வர்க்க சேவகம்:

வலது திருத்தல் வாதமும் இடது அதிதீவிரவாதமும் எப்போதும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது என்பது உலக வரலாற்று உண்மையாகும். இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளாக நக்சலைட்டுகளும், தற்போதைய மாவோயிஸ்டுகளும் இதையே செய்கின்றனர். 1970-ம் ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் காங்கிரசுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியை தாக்கினர். 1972ல் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை படுகொலை செய்தனர். தற்போது திரிணாமுல் காங்கிரசுடன் இணைந்தும், இதர பிற்போக்கு மதவாத சக்திகளுடன் இணைந்தும் மார்க்சிஸ்ட் கட்சியை தாக்குகின்றனர். 2009-ல் மாவோயிஸ்ட் தலைவர் கோட்டேஸ்வரராவ் அடுத்த மேற்கு வங்க முதல்வராக மம்தாபானர்ஜியை பார்க்க விரும்புகிறோம் என்று தங்களது புரட்சிகரமான கொள்கையை பேட்டியாக கொடுத்தார். இதனால்தான சில முதலாளித்துவ பத்திரிகைகள் பாராளுமன்ற இடதுசாரிகளுக்கு மாற்று என்றும், அதிகாரபூர்வ இடதுக்கு மாற்று என்றும் இந்த மாவோயிஸ்டுகளுக்கு மாலை சூடுகின்றனர்.சில அறிவுஜீவிகளும் இதற்காக சில சாகசசெயலில் ஈடுபடுகின்றனர்.சில பத்திரிக்கைகள் எழுதியுள்ளது போல் இந்த மாவோயிசம் கனவின் மரணம் அல்ல, மாறாக ஆளும்வர்க்க கனவின் செயலக்கம்மிக்க வீரர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் மக்கள் செல்வாக்கு படைத்த இடதுசாரி இயக்கத்தை ஒழிக்க நேரடியாக ஈடுபடுகிறது. இந்திய பெருமுதலாளிகளும் இதே வேலையினை செய்கின்றனர். இவர்களுடன் கைகோர்த்து மாவோயிஸ்டுகள் வலம் வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகள் இந்தியாவில் எந்தப்பகுதியிலும் மக்களிடையே முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் ஆளும் வர்க்க சேவகர்களாக செயல்படும் மாவோயிஸ்டுகளை தத்துவார்த்த அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் நலன்களை முன்னெடுத்து செல்வதே இன்றைய தேவையாகும்.

(ஆகஸட் மாத மார்க்சிஸ்ட் மாதஇதழ் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது)