Saturday, June 28, 2008

கற்பனாவாதத்தை புரட்சியாக கொண்டதே ம.க.இ.க.!

இந்திய அரசின் வர்க்கத் தன்மை குறித்த இவர்களது தவறான நிலைபாடுகளே மொத்த தவறுகளுக்கும் அஸ்திவாரமாக திகழ்கிறது. மொத்தத்தில் இந்திய ஆட்சியதிகாரத்தை பிடிப்பதற்காக இவர்கள் காட்டும் பாதை ஹாரிபாட்டர் கதைகளை மிஞ்சக் கூடிய சாகசமாகவே இருக்கிறது. எஸ்..சி. கட்சித் திட்டப் பிரிவு 39 இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

".... முதலில் கிராமப்புறங்களை விடுதலை செய்து இறுதியாக நகர்ப்புறங்களைக் கைப்பற்றுவதற்கான புரட்சிகர ஆயுதப் போராட்டத்தோடு ஒருங்கிணைக்கும். "
பிரிவு 40 இல்... "இந்தியாவின் விடுதலைக்கான பாதை மற்ற எல்லா காலனிய, அரைக்காலனிய - அரை நிலப்பிரபுத்துவ நாடுகளையும் போலவே நீண்டகால மக்கள் யுத்தப் பாதையாகும்... "

பிரிவு 42 இல், "உழவர்களைச் சார்ந்து நிற்பது, கிராமப்புறங்களில் தளப் பிரதேசங்களை நிறுவுவது, நீண்டகால ஆயுதப் போராட்டத்தில் அழுந்தி நிற்பது, கிராமப்புறங்களைப் பயன்படுத்தி நகர்ப்புறங்களைச் சுற்றி வளைத்து இறுதியில் நாடு முழுமையையும் கைப்பற்றுவது; ஆகியவற்றின் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கம வெற்றிகரமான மக்கள் யுத்த்தைத் தொடுக்க முடியும். "

எஸ்.ஓ.சி. போலி நக்சலிசவாதிகள் தாங்களது முதலாளித்துவ புதிய ஜனநாயக புரட்சியை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பதை மேற்கண்டவாறு தெளிவுபடுத்தியுள்ளனர். அதாவது, நான்கு நாட்டு அடிமை இந்தியாவை தூக்கியெறிவதற்காக ஒரு ஆயுதப் புரட்சியை மேற்கொள்ளப் போவதாக கதைக்கிறது இவர்களது கட்சித் திட்டம். அதுவும் கொரில்லாப் போர்முறையில் என்பதுதான் வேடிக்கையானது. எப்படி மேற்கொள்ளப் போகிறார்கள்? முதலில் கிராமப்புறங்களை தங்களது தளப் பிரதேசங்களாக மாற்றுவது பின்னர் படிப்படியாக முன்னேறி நகர்ப்புறங்களை கைப்பற்றுவது இப்படித்தான் இந்தியாவில் புரட்சியை நடத்தப் போகிறார்கள் இந்த TNOC நக்சல் குழுவினர்.
என்ன? கொக்குத் தலையில் வெண்ணையை வைத்து பிடித்த கதையாகத்தான் இருக்கிறது இவர்களது புரட்சிகர போர்த்தந்திர திட்டம்!

பிரச்சினையின் ஆரம்பமே எங்கே இருக்கிறது என்றால்? இந்தியா இன்னும் முழுமையாக விடுதலை அடையாத நாடு? அது அடுத்தவன் தயவில் அதுவும் நான்கு நாடுகளின் ஆதரவில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எனவே சும்மா ஒரு ஊது ஊதினால் இந்த ஏகாதிபத்திய சக்திகள் பறந்தோடி விடும் என்று கனா கண்டுக் கொண்டிருக்கின்றனர் எஸ்.ஓ.சி. குழுவினர். இந்திய பெரு முதலாளிகள் தலைமையிலான ஆளும் வர்க்கம் மிகவும் பலமானது என்பதை உணர்ந்து கொள்ளாததாலும், அது தன்னுடைய சுயேச்சையான வழியில் செல்லத் தக்கது என்பதை அனுபவத்தின் மூலம் உணராததாலும், தன்னுடைய வளர்ச்சிக்கு அது ஏகாதிபத்தியத்தையும் - நிலப்பிரபுத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் என்ற உண்மையை மறந்ததால் வந்த வினையே இந்த ஹாரிபாட்டர் புரட்சி கதை!
இன்றைக்கு இந்தியாவை துணை வல்லரசு என்று கதைக்கும் இதே எஸ்.ஓ.சி.தான் அடிமை நாடு என்றும் பட்டம் சூட்டுகிறது என்ற உள் முரண்பாட்டை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளோம்.

அதாவது, இந்திய பெரு முதலாளித்துவ அரசின் அரசு எந்திரம் மிக வளுவானது என்பதை எஸ்.ஓ.சி. கும்பல் மறக்கிறது. இந்திய அரசின் இராணுவம் - அரசு கட்டமைப்பு - பொருளாதாரம் இவையனைத்தும் ஒரு வலுவான கண்ணியாக பின்னிப் பிணைந்துள்ளது. இவர்களின் வர்க்க நலனை காப்பதற்காக தற்போதைய அரசு எந்திரம் நன்றாக பயிற்று விக்கப்பட்டுள்ளது. எனவேதான் எஸ்.ஓ.சி. கும்பல் கனா கான்பது போல் ஒரே ஒரு கிராமத்தைக்கூட இன்னும் இவர்களால் கைப்பற்ற முடியவில்லை. தங்களது தளப் பிரதேசங்களாக மாற்ற முடியவில்லை. இவர்களின் தளப் பிரதேசங்களை இந்திய இராணுவத்தைக் கொண்டுக் கூட நசுக்க வேண்டியதில்லை. மாநில போலீசைக் கொண்டே நசுக்கி விடும் என்ற உண்மையைக் கூட உணராத பாலகத்தன்மையோடு இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

சமீபத்திய சட்டீஸ்கர் உதாரணம் என்ன? நக்சலிச வன்முறை அரசியலை முறியடிப்பதற்காக, மாநில அரசு அங்குள்ள பழங்குடியின மக்களைப் பயன்படுத்தி சல்வாஜூடும் என்ற அமைப்பை உருவாக்கி நக்சலிசத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்த வைத்துள்ளது. தற்போது நக்சலிசவாதிகள் இவர்களை தங்களது பிரதான எதிரி வர்க்கம் போல் கருதி சுட்டுக் கொல்வதும் - அவர்களது குடிசைகளுக்கு தீயிடுவதும் வாடிக்கையாகியுள்ளது. அதாவது, எந்த வர்க்கத்திற்கு ஆதரவாக இவர்கள் நிற்கிறார்களே அந்த வர்க்கமே இவர்களுக்கு எதிரியாகவும் திருப்பப்படுகிறது.

இங்கேதான் இவர்களது நடைமுறை தவறுகள் பாடமாக படிகிறது. பெருந்திரளான மக்களை அரசியல் ரீதியாக திரட்டுவதற்கு பதிலாக சிறு குழுக்களை வைத்துக் கொண்டு ஆயுதப் போராட்டம் செய்வதால் மாற்றம் வரும் என்பது இந்திய சூழலுக்கு பொருந்துமா? என்பதை இவர்கள் பரிசீலிக்கத் தயாராக இல்லை. தெலுங்கானாவில் ஆயுதப் போராட்டத்தை நடத்தியதன் மூலம் கிடைத்த அனுபவங்களின் வாயிலாகவே இன்றைக்கு சி.பி.எம். உட்பட பல்வேறு இடதுசாரி கட்சிகள்? ஏன் இவர்களது வாரிசுகளான லிபரேசன் - செங்கொடியினர் - டெமாக்ரசி போன்றவர்கள் எல்லாம் கூட ஜனநாயக ரீதியாக வெளியிலிருந்து செயல்படுவதற்கு வந்து விட்டார்கள் என்ற உண்மையை உணராமல் பழைய பஞ்சாகத்தை தனது கட்சி அணிகளுக்கு போதித்து வருகிறது எஸ்.ஓ.சி.

1976இல் துவக்கிய எஸ்..சி. கடந்த 30 ஆண்டுகளாக எத்தனை கிராமங்களை தனது தளப் பிரதேசங்களாக மாற்றியது? தமிழகத்தில் அதற்கு எத்தனை கிளைகள் உள்ளது? இவர்களது கொரில்லா போர் முறைகள் எல்லாம் வெறும் எழுத்தில் மட்டும் தானா? வெகுஜன தேர்தல் அரசியலை நடைமுறை தந்திரப் போர் முறையின் ஒரு பகுதியாக கொண்டுள்ள சி.பி.எம்.யை விமர்சிக்கும் எஸ்.ஓ.சி. தாங்கள் எழுதி வைத்துள்ள எதனையும் எள் முனையளவு கூட நிறைவேற்ற வில்லை என்பதையாவது உணருமா?

மேலும், தற்போது இந்திய பெரு முதலாளி வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இராணுவ கூட்டு உட்பட பல்வேறு முனைகளில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள முனைகிறது. (இத்தகைய கூட்டினை சி.பி.ஐ.(எம்) தொடர்ந்து எதிர்த்து வருகிறது.) மேலும் ஒடுக்குமுறை கருவியான இராணுவத்தையும் - போலீசையும் நவீனப்படுத்தி வருவதோடு, மக்கள் மீது அவற்றை ஏவுவதற்கும் - போராட்டங்களை ஒடுக்குவதற்கும் பெரும் பலம்பெற்றதாக விளங்குகிறது. இந்நிலையில், தங்களது போர்முறையான கொரில்லா போர்முறை என்பது உயிர்பலிகளை கொண்டதொரு வன்முறை வழியே தவிர புரட்சிகர வழியாகாது! அவ்வாறு மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் முளையிலேயே கிள்ளியெறியும் இந்திய ஆளும் வர்க்கம்! இது ஒரு சில அடர்ந்த காடுகளில் மட்டுமே நடக்கக்கூடிய செயலாக இருக்குமே தவிர மக்கள் மத்தியில் செயலாற்றக்கூடிய புரட்சிகர பணியாக இருக்காது.

இதற்காக இவர்கள் சீனாவில் நடைபெற்ற புரட்சியை உதாரணம் காட்டலாம். ஆனால் நடைமுறையில் சீனாவின் புரட்சி நடைபெற்ற காலமும் - தற்போதைய காலமும் முற்றிலும் வேறுபட்டது. அத்துடன் சீனாவின் புரட்சிகால வர்க்கத் தன்மைக்கும் இந்தியாவின் தற்போதைய வர்க்கத் தன்மைக்கும் முற்றிலும் வேறுபாடு உண்டு என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே புரட்சியை இறக்குமதி செய்ய முடியாது? ஒவ்வொரு நாட்டின் ஸ்தூலமான நிலைமைகளுக்கு ஏற்ப வர்க்க சக்திகளை அடையாளம் காண்பதும் - அதற்கேற்ப யுத்த தந்திர மற்றும் நடைமுறை தந்திரங்களை கடைப்பிடிப்பதுமே புரட்சியை வெற்றிகரமாக்கும். ஆனால் TNOC நடைமுறையில் நிறைவேற்ற நினைப்பது வெறும் கற்பனாவாத புரட்சியே தவிர வேறல்ல.

TNOC கும்பல் தனது புரட்சிகர வாய்ச் சவடாலை நிறுத்தி விட்டு இந்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றிய தவறான மதிப்பீடுகளிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்ற உள்கட்சி சர்ச்சையிலாவது ஈடுபடலாம் அதுவே இந்த ஓட்டைப் படகை கரையேற்றவாவது வழிவகுக்கும்.

அழுகி வரும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை!

மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரில் செயல்படும் ம.க.இ.க. ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களிடம் எஸ்.ஐ.ஓ. 2000 தரச்சான்று பெற்று புரட்சிகரமானவர்கள் நாங்களே மற்றவை அனைத்தும் போலிகளே என்று வாய்ச்சவடாலை வியாபாரமாக்கி சீர்குலைவையே தனது தொழிலாக கொண்டு செயலாற்றி வருகிறது. தன்னையொரு புரட்சிகர சக்தியாக கூறிக்கொள்ளும் ம.க.இ.க. இதன் அரசியல் தலைமை எது என்று யாருக்கும் தெரியாத, மறைமுகத் தலைமையை வைத்துக் கொண்டு பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலுமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் இதன் தலைமை மனுதர்ம பார்ப்பனீயத்தை தொழிலாக கொண்டது என்று குட்டு பட்டு வந்தாலும் மற்றவை ஏசியும் - பேசியும் - வாய்ச்சவடால் அடித்தும் தனது முகத்தை மறைத்துக் கொண்டு வந்துள்ளது.கொஞ்சம் அதன் அரசியல் முகத்திரையை விலக்கிப் பார்த்தால் உண்மை சொரூபம் வெளிப்பட்டு விடும்.

இணையத்தில் டசன் கணக்கில் உலா வரும் ம.க.இ.க. ஆதரவாளர்களுக்கே கூட அதன் அரசியல் தலைமை எது என்று தெரியுமா என்பதே சந்தேகம்தான்! போககட்டும்!தமிழ் மாநில அமைப்பு கமிட்டி - இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்பதே ம.க.இ.க.வின் அரசியல் தலைமையின் முகவிலாசம். முகவிலாசம் அற்றவர்களுக்கு ஏன் முகவிலாசம் கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சில பிண்டங்கள் கருவில் இருக்கும் போதே தன்னை சகல கலா வல்லவனாக - மார்க்கண்டேயனாக துள்ளும்போது அதன் பரிதாப நிலையை சொல்லித்தான் ஆகவேண்டும்!அது சரி! இனிமேல் இவர்களை சுருக்கமாக எஸ்.ஓ.சி. (தமிழ் மாநில அமைப்பு கமிட்டி) என்றே அழைப்போம்! இந்த கட்சியின் தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது? இதன் கொடி என்ன? இந்த கட்சிக்கு தலைமை தாங்கும் கட்சித் தலைவர்கள் யார்? என்று நாம் கேட்டு விட்டால் உடனே இந்த கேள்வியில் உளவு பார்க்கும் தோரணைதான் தெரிகிறது என்று உளவு பட்டம் கட்டுவார்கள் இந்த ஏகாதிபத்திய சீர்குலைவு கைக்கூலிகள். உண்மையை மட்டும் பேச மாட்டார்கள் இந்த நிஜ அனானிகள்.எஸ்.ஓ.சி. தன்னை இந்திய பொதுவுடைமை கட்சி என்று அழைத்துக் கொள்வதுதான் பரிதாபம்! இதைப் பார்த்து ஏதோ இவர்களுக்கு இந்தியா முழுவதும் பெரிய வலைப் பின்னல் இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள்... சிலந்தி வலைதான் அவர்களை சுற்றியிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்குள் மட்டும் தவளை கத்தல் கத்தும் ஒரு அமைப்பே தவிர அகில இந்திய அமைப்பு அல்ல. ஒரு முக விலாசத்திற்காக அப்படி வைத்துக் கொள்கிறார்கள். அல்லது ஏதாவது அகில இந்திய அளவில் செயல்படும் நக்சலிச அமைப்பின் துணை கிரகமாக செயலாற்றுகிறார்களா என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.போகட்டும்! இவர்களது திட்டம்தான் என்ன? பாவம் இவர்களிடம் இதை மட்டும் கேட்டு விடக் கூடாது! பரம ரகசியமாக பதுங்கி விடுவார்கள்!

1976இல் துவக்கப்பட்ட இந்த துணை கிரகத்திற்கு முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி திட்டமே இல்லை என்பதுதான் வேடிக்கையானது! இந்த கருப்பிண்டங்கள்தான் உலப் புரட்சியை நடத்தப்போவதாக ஊளையிடுகின்றன. வெறும் நகல் திட்டமாகத்தான் உலா வருகின்றன. அதாவது இறுதி பெறாத திட்டம்; அதாவது அடிக்கடி தேவைக்கேற்ப கையை - காலை வெட்டிக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம்! அப்பத்தான் அரசியலில் அடிக்கடி புரட்சிகர ஜோக்கர் வேஷம் போடலாம்!இந்தியாவை ஒரு நாடாக ஏற்காதவர்கள்; வெறும் வார்த்தையில் - எழுத்தில் பம்மாத்து காட்டுபவர்கள் அவர்களது திட்டத்தின் முதல் பாராவை கிழே கொடுத்துள்ளேன். எங்கேயும் இந்தியா நாடு என்று வராது. அதுதான் அவர்களது மறைமுக பாரதீய அஜண்டா... இந்திய மக்கள் என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்.
"நமது அன்பிற்குரிய இந்நாடு உலகின் மிகப் பெரியதும், பழைமையானதுமான நாடுகளில் ஒன்று. 95 கோடி மக்களைக் கொண்ட நாடு. உழவர் பெருங்டிக மக்களை மிகப் பெருமான்மையாகக் கொண்ட விவசாய நாடு....."காரல் மார்க்ஸ் இந்திய பொருளுற்பத்தி முறையை ஆசிய பாணி பொருளுபத்தியை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுகிறார். இந்த வரியை அப்படியே காப்பி அடித்துக் கொண்டு தனது திட்டத்திலும் சேர்த்துக் கொண்டு குழப்புவதில்தான் இவர்களது அலாதியான திறமையே வெளிப்படுகிறது."

இந்திய சமுதாயத்தில் ஆசிய சொத்துடமை வடிவமும் அதன் அடிப்படையிலான கிழக்கத்தியக் கொடுங்கோன்மையும் நீண்ட காலம் நிலவியது. இதன் கீழ் சட்டபூர்வமாகத் தனிச் சொத்துடைமை இல்லை...."அன்பு அனானிகளே! இணையத்தில் உலாவும் பொருளாதார ஞானிகளே இவர்களது கூற்று சரியா? என்பதை கொஞ்சம் எனக்கும் விளக்குங்கள்! அதாவது பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் தனிச் சொத்துடைமை இல்லையாம்? அப்படியென்றால் சோசலிச சமூகமாக இருந்தது என்று கேள்வி எழுப்பாதீர்கள்? அவர்கள் பார்வையில் பல்லாயிரக்கணக்கான நிலங்களை வைத்திருந்த குறுநில மன்னர்கள், நிலப்பிரபுக்கள், நிலத் திமிங்கலங்கள் எல்லாம் பாடமல் போனதைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்பக் கூடாது! இப்போது தெரிகிறதா? இவர்கள் யாருடைய நலனை காப்பதற்காக செயல்படுகிறார்கள் என்று! இவர்களின் உண்மையான வர்க்க முகம் ஏகாதிபத்திய சீர்குலைவு முகமே! உடனே நவீன வழக்கறிஞர்கள் போல் வாதாடலாம் மடயனே சட்டப்பூர்வமாகத்தானே இல்லையென்று சொல்லியுள்ளோம் என்று. அதை கண்டு நீங்கள் நகைக்க வேண்டாம்!ம.க.இ.க. பார்ப்பனீம் என்று சொல்லும் போது நமக்கு கூட ஒன்றும் புரியவில்லை! அவர்கள் மனு அதர்மர்த்திற்கே ஐ.எஸ்.ஓ. 2000 சான்றிதழ் வழங்குவதை கீழே கவனியுங்கள்.

"பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய வர்ணங்களும் மற்றும் வர்ணத்தில் சேராத பஞ்சமர் - சண்டாளர் அடங்கிய சமூக எஸ்டேட்டுகள், அவற்றிற்கு அடிப்பைடயாக அமைந்த சாதிய அமைப்புகளின் அடிப்படையிலான வேலைப் பிரிவினைகள் இருந்தன...."

தமிழச்சிகள், பெரியாரியவாதிகள் கோபப்படக் கூடாது. அதாவது மனு நமக்கு விதித்தது வேலைப் பிரிவினையைத்தான் தீண்டாமையை அல்ல! இதைத்தான் அவர்கள் ம.க.இ.க. தலைமை மிக அழுத்தமாக குறிப்பிடுகிறது. இந்திய சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள ஜாதிய ஏற்றத்தாழ்வு பெரும் பகுதி உழைப்பாளி மக்களை சுரண்டி - கொழுத்து தீண்டத் தகாதவர்களாக வெறும் நடைப்பிணங்களாக ஆக்கி வைத்துள்ளதற்கான அடிப்படையே நால்வருணத் தத்துவம்தான்! ஆனால் இதனை வேலைப் பிரிவினை நம்மை ஏய்கிறது எஸ்.ஓ.சி. இவர்கள்தான் நவீன மனுதர்மவாதிகள்.அதைவிட கொடுமை என்னத் தெரியுமா? ஆசியபாணி சமூகம் என்று சொல்லி நிலம் தனிவுடைமையாக இல்லை என்று கூறிய பிறகு இவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.

"எல்லா கிராமச் சமூகங்களுக்கும் மேலே அதி உயர்ந்த அதிகாரமாகவும் இணைக்கும் ஒருமையாகவும் விளங்கிய மத்திய அரசிடமிருந்து தனி நபர்கள் அனுபோக உரிமைகளைப் பெற்றனர்..."

அதாவது, கிராம மக்கள் நிலத்தை தாங்கள் தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுபோக உரிமை பெற்றார்களாம்! எந்த மத்திய அரசு என்பதை மட்டும் விளக்க மறந்து விட்டார்கள்? பிரிட்டிஷ் அரசா? அல்லது தற்போதைய மத்திய அரசா? (ஐயையோ.... இப்ப உள்ள அரசு காலனி அரசு... அதாவது அடிமை அரசு...) பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையில் வைத்திருந்த மூப்பனார்கள் - வாண்டையார்கள் - சாம்பசிவ ஐயர்களிடம் எல்லாம் அப்போது அதிகாரமில்லையா? மத்திய அரசை ஆட்டியதே இந்த நிலப்பிரபுக்கள்தானே! அப்புறம் எப்படி மத்திய அரசிடம் இருந்து அனுபோக உரிமை பெற்றார்கள்?கடைசியா இந்த ஆசியபாணி சமூக பித்தலாட்டத்தை இவர்களே அம்பலப்படுத்துவதை கொஞ்சம் கவனியுங்கள்.

"ஆங்கிலேயே காலனியாதிக்கவாதிகள் இந்தியாவை காலனியாக்கிய பின் அதுவரை நீடித்திருந்த ஆசியச் சொத்துடமை வடிவிலான சிறு கிராம சமூகங்களின் நிலப்பிரபுத்துவப் பொருளாதார அடிப்படையைத் தகர்த்தனர். பொதுச் சொத்துடைமையின் இடத்தில் தனியுடைமையப் புகுத்தினர்..."

ஆஹா... அண்டப் புளுகு ஆகாசப் புளுகு கேள்விப் பட்டிருக்கோம்... எஸ்.ஓ.சி. புளுகு இப்பத்தான் வெளிப்பட்டது. முதலில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தனிச் சொத்துடைமை இல்லை என்று கூறி விட்டு, அப்படியே 3வது பிரிவில் அந்தர் பல்டி அடித்து பிரிட்டிஷ் அரசு ஆசிய பாணி சொத்துடைமையை ஒழித்து விட்டது என்று கூறுவது யாரை திருப்திப்படுத்த! அதை விடக் கொடுமை நிலப்பிரபுத்துவ பொருளாதார அடிப்படையைக் கூட தகர்த்து விட்டனராம்! அதாவது இந்தியாவில் தற்போது எங்கும் நிலப்பிரபுக்கள் இல்லை! அனைத்து நிலங்களையும் பிரிட்டிஷ் அரசு பிரித்துக் கொடுத்து புரட்சி செய்து விட்டது! நம்புங்கள் ம.க.இ.க. தலைமை ஊளையிடுகிறது அது நரி என்று நம்புங்கள்!...

பயங்கரவாதிகள் கொடுக்கும் பயங்கரவாத பட்டம்!

ம.க..க. (எஸ்.ஓ.சி. - இ.பொ.க.-மா.லெ.) இந்திய சுதந்திரத்தை எப்படி அணுகுகிறது என்று பார்ப்போம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவை விடுதலை செய்வதற்காக காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - முஸ்லீம் லீக் மற்றும் நவஜவான் பாரத் சபா போன்ற பல்வேறு மிதவாத - தீவிரவாத இயக்கங்கள் தொடர்ந்து போராடி பிரிட்டிஷ் அரசை இந்தியாவிலிருந்து அகற்றியது. இதற்காக எண்ணற்ற இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை இந்திய மண்ணிலும் - அயல்நாட்டிலும் தியாகம் செய்த வரலாறு அனைவருக்கும் தெரியும்! இந்த சுதந்திரப்போராட்ட தியாகிகளின் கனவுகள் தற்போதைய இந்திய அரசில் நிறைவேறாமல் போயிருக்கலாம். இருப்பினும் இந்திய மண்ணிலிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை விரட்டியடித்த பெருமை இந்திய சுதந்திரப் போராட்டத்தை நடத்திய - மகத்தான தியாகங்களை செய்த இந்திய மக்களையேச் சாரும்.

இந்த தியாகங்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி கொச்சைப்படுத்தியுள்ளது ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. குருட்டு கும்பல். மேலும் அவர்களுக்கு குட்டி முதலாளித்துவவாதிகள் என்ற நாமகரணத்தையும் சூட்டியுள்ளது. ம.க.இ.க. திட்டம் கீழ்க்கண்டவாறு கூறுவதைப் பாருங்கள்“நாட்டுப் பற்று என்னும் உள்ளுணர்வால் உந்தப்பட்ட புரட்சிகர அறிவுத்துறையினரும் குட்டி முதலாளிய இளைஞர்களும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் - அதாவது கொடுங்கோலர்களான ஆங்கிலேயே நிர்வாகிகளைத் தனித்தனியே அழித்தொழிப்பதின் மூலம் - வெறுக்கத்தக்க காலனிய ஆட்சிக்கு முடிவுகட்ட முனைந்தார்கள்.....” மேலும், “...நாட்டு விடுதலைக்குப் பரந்துபட்ட மக்களை அவர்கள் சார்ந்து நிற்கவுமில்லை..” தொடர்ந்து, “....இவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து நமது மக்கள் மதிப்பிட முடியாத படிப்பினைகளைப் பெற்றார்கள்...

“23 வயதில் தூக்குமேடைய ஏறிய பகத்சிங், சுகதேவ், சந்திரசேகர் ஆசாத், இன்னும் உத்தம்சிங், கொடிகாத்த குமரன், கல்பனாதத்.... போன்ற எண்ணற்ற இளைஞர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் ஜாலியன் வாலாபாக்கில் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு உட்பட பல்வேறு அரக்கக்கத்தனத்திற்கு அவர்கள் பாணியிலேயே விடைகொடுக்க முனைந்தனர்.

இது இந்திய மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த வீரதீரமிக்க செயல்கள். மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விரட்டியடிப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்தனர் நமது தியாகிகள் குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தை ஆரம்பித்து பாசிச ஜப்பான் உதவி உட்பட அனைத்தையும் நாடினார். இதற்காக அவரை பாசிஸ்ட் ஆதரவாளர் என்று முத்திரை குத்த முடியுமா? இந்திய விடுதலைப் போரின் ஈட்டி முனையாக இளைஞர்களின் தியாகம் - இந்திய மக்களை வீறு கொண்டு எழச் செய்தது. இத்தகைய தியாகத்தை இவர்களது நாலாந்தர அரசியல் முடிவை எட்டுவதற்காக பயங்கரவாதம் என்று சித்தரித்து பின்லேடனுக்கு இணையாக காட்சிப்படுத்துவது இவர்களின் சீரழிந்த அரசியல் பார்வையைத்தான் வெளிப்படுத்துகிறது.மேலும் அந்த தியாகப்பூர்வமான இளைஞர்கள் பரந்துப்பட்ட மக்களை சார்ந்து நிற்க வில்லையாம்! இதிலிருந்து நமது மக்கள் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்று முடிக்கிறார்கள். உண்மையில் இவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்?

நக்சலிசம் பேசும் இந்த திண்ணை வேதாந்திகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்தியா முழுவதும் காட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருப்பதை தவிர வேறு என்ன? மேலும் இவர்களது வெகுஜன அரசியல் நடவடிக்கை என்ன? வெட்டிப்பேச்சும் - வாய்ஜாலமுமே! அடுத்து இணையத்தில் குப்பை கொட்டுவது.

நக்சலிசம் இன்றைய தினம் வர்க்கப்போராட்டம் நடத்துகிறேன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான சாதாரண கூலி உழைப்பாளிகளையும் - தலித் மக்களையும் ஆள்காட்டிகள் என்ற பெயரால் கொன்றதைத் தவிர வேறு என்ன கிழித்தது! எத்தனை கிராமத்தை விடுவித்துள்ளது? தமிழகத்தில் எந்த கிராமத்தையாவாது இவர்கள் இந்திய ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து விடுவித்து சுகபோக வாழ்க்கையை கொடுத்துள்ளார்களா?

இவர்களது பயங்கரவாத செயல்களில் தினந்தோறும் பலியாவது உழைப்பாளிகள்தானே! இந்த ம.க.இ.க.- TNOC கும்பலுக்கும் வெகுஜன மக்களுக்கும் என்ன தொடர்பு! இவர்கள் எப்போதும் இணையத்தில் அடிக்கடி கூறும் வேதம் என்ன தெரியுமா? நாங்கள் எண்ணிக்கையில் நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல என்று சொல்லுவதுதான்! இந்த வேதாந்திகள்தான் கூவுகிறார்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தீரமிக்க இளைஞர்களுக்கு பரந்துபட்ட மக்களுடன் தொடர்பு இல்லையாம்?தற்போதைய சுதந்திர இந்தியாவைப் பற்றிய இவர்களது கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? இது பெயரளவிற்கான சுதந்திரம் மட்டுமே; அதாவது இன்னும் இந்தியா அரை அடிமை நாடாக இருக்கிறது! பிரிட்டிஷ் இந்தியாவிடம் அடிமைப்பட்டிருந்த நமது நாடு தற்போது நான்கு நாடுகளிடம் அடிமைப்பட்டிருக்கிறதாம்! அதாவது, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா. அதெப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது காலனியை மற்ற ஏகாதிபத்திய நாடுகளுடன் பங்கிட்டுக் கொண்டது? மேலும் ரஷ்யாவை இவர்கள் சமூக ஏகாதிபத்தியம் என்று அழைப்பார்கள். தற்போது அந்த சோசலிச சோவியத் யூனியனே இல்லை? ஆனால் இவர்களது திட்டம் அதையே வேதம் ஓதிக் கொண்டிருகிறது. TNOC கும்பல் இதனை பக்தி சிரத்தையோடு விமர்சனமின்றி மனப்பாடம் செய்துக் கொண்டு திரிகிறது. மொத்தத்தில் நாம் நான்கு நாட்டு அடிமைகள்! இந்த நான்கு நாட்டு அடிமைத்தளையிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக இவர்கள் ஏந்தக் கூடிய ஆயுதம் என்ன தெரியுமா? புல் - பூண்டுகள்தான்....
அமெரிக்காவுக்கு மட்டும்தான் உண்டா பின்லேடன் போன்றவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் உரிமை? எங்களுக்கு இல்லையா என்று அதற்கு மொத்த உரிமையை குத்தகை எடுத்துக் கொண்டு நமது அளப்பரிய தியாகிகள் மீது பயங்கரவாத முத்திரையை குத்தியுள்ளது ம.க.இ.க. கும்பல்.

சந்திப்பு

http://santhipu.blogspot.com/

அடிமைக்கு மகாராஜா பட்டம் சூட்டும் ம.க.இ.க.!

.... மறைமுகத் தலைமை எஸ்..சி. - யின் கட்சித் திட்டத்தை வாசிக்கும் எந்தக் குழந்தைக்கும் அதிலுள்ள ஏராளமான முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் நகைப்பைத்தான் ஏற்படுத்தும். இந்தியாவை (மன்னிக்கவும் அவர்கள் இந்தியா என்ற ஒரு நாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை) நான்கு நாடுகளின் அரை அடிமையாக இருப்பதாக சித்தரித்து விட்டு பின்னர் அதற்கு பவுடர் பூசி, பொட்டு வைத்து, அழகுபார்த்து சீவி, சிங்காரித்து, கிரீடமெல்லாம் வைத்து அதனை அரியாசனத்தில் ஏற்றி வைத்து மகாராஜா பட்டம் சூட்டி அழகு பார்க்கின்றனர்.அவர்களது கட்சித் திட்டத்தின் 26வது பாரா கீழ்க்கண்டவாறு கூறுகிறது. அதற்கு விளக்கமே தேவையில்லை! நீங்களே புரிந்து கொள்ள முடியும்!

"இந்திய அரசு நமது நாட்டின் பொருளாதாரத்தை இராணுவமயமாக்கியிருக்கிறது. படுவேகமாகப் போர்த் தயாரிப்பு செய்வதில், ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டிருக்கிறது. தெற்கு ஆசியாவில் இந்தியாவைச் சுற்றிலுமுள்ள சிறு நாடுகளைப் பொருத்தவரை விரிவாக்கக் கொள்கையையும் பிராந்திய துணை வல்லசுக் கொள்கையையும் கடைப்பிடிக்கிறது. அவற்றைத் தனது சொந்தச் சார்பு நாடுகளாக அல்லது துணை நாடுகளாக மாற்றும் நோக்கத்துடன் அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றது. பிற்போக்கு இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. அந்நாட்டைத் துண்டாடியது. சிக்கிமை அபகரித்துக் கொண்டது. பூடானையும், நேபாளத்தையும், இலங்கையையும், வங்கதேசத்தையும் அச்சுறுத்துகிறது. இவை அனைத்தும் நமது நாட்டைச் சுற்றிலுமுள்ள சிறிய ஆசிய நாடுகளின் சுதந்திரமும், பிரதேச ஒருமைப்பாடும் தொடர்ந்து இந்திய பிராந்திய விரிவாக்கக் கொள்கையின் அபாயத்தில் இருப்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன....."

அன்பர்களே, நண்பர்களே இந்தியா ஒரு அரை அடிமை நாடு. அதுவும் நான்கு நாட்டு அடிமை நாடு. மேலும் இந்திய முதலாளிகள் முதுகெலும்பில்லாத பிச்சைக்கார முதலாளிகள் அதாவது தரகு அதிகார வர்க்க முதலாளிகள். சொந்த மூளை இல்லாதவர்கள். இப்படிப்பட்ட படு வீக்கான நோயாளியான இந்திய அரசு ஆசிய பிராந்தியத்தில் துணை வல்லரசாக செயல்படுகிறதாம்! அதாவது அடிமை மகாராஜா பட்டம் சூட்டியுள்ளது ம.க.இ.க. தலைமை. ஆஹா என்ன அரசியல் முதிர்ச்சி! அரசியல் நிலைபாடு.இவர்கள் வாதப்படி எதிர்காலத்தில் இந்த சூரப்புலிகள் ஆட்சிக்கு வந்தால் சிக்கிமை கழற்றி விட்டு விடுவார்கள். அதை எந்த நாட்டிடம் தாரை வார்ப்பார்கள் என்பதுதான் புரியவில்லை. அல்லது நான்கு நாடுகளில் எது அதற்கு உரிமைக் கொண்டாடும் என்பதும் மர்மமாக உள்ளது. இல்லையென்றால் ம.க.இ.க. தலைமை ஒரு துணை கிரகமாக இருப்பது போன்று சிக்கிமை அந்தரத்தில் தொங்க விட்டு விடுவார்கள் போலும்.இந்தியாவின் எல்லைப் புறங்களையே காப்பாற்ற முடியாத நிலையில் திணறிக் கொண்டிருக்கும் இந்தியா குட்டி நாடுகளையெல்லாம் ஆக்கிரமிக்கிறதாம்! அதை விட கொடுமை நேபாளத்தை இந்தியா அச்சுறுத்துகிறதாம்! தற்போது ஆட்சிப்பொறுப்பேற்கும் மாவோயிஸ்ட்டுகள் கூட இந்த நிலையைக் கேட்டால் கெக்கலிப்பார்கள். மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூட கூறியிருப்பதென்ன இந்தியாவுடன் எங்களுக்கு பாரம்பரியமான உறவு உள்ளது. எனவே சீனாவை விட அதிகமான நெருக்கத்தை இந்தியாவுடன் வைத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இங்கே இருக்கக்கூடிய ம.க.இ.க. போலி நக்சலிசவாதிகள் போல் அவர் கருதியிருந்தால் இந்தியாவை குட்டி ஏகாதிபத்தியம் என்று விமர்சித்திருக்க மாட்டாரா?அதைவிட கொடுமை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்ததாம்! பிரச்சினையே இங்கே தலைகீழாக இருக்கும்போது இந்தியா ஆக்கிரமிக்கிறது என்று ம.க.இ.க. கூறுவது அதன் அரசியல் பழுத்த முதிர்ச்சியினையே வெளிப்படுத்துகிறது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை உட்உட ஆசிய பகுதியில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவது ஏகாதிபத்திய நாடுகளின் சதியே! கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காஷ்மீரை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனி நாடாக்குவதற்கான முயற்சியில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது. இந்நிலையில் அது பாகிஸ்தானுக்கு கொம்பு சீவி விட்டு... இந்தியாவுக்கு எதிராகவும் - பொருளாதார ரீதியாக பலம் பெற்று வரும் சீனாவுக்கு எதிராகவும் பயன்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வலையில் இந்தியாவைம் தற்போது இழுப்பதற்கு முயற்சித்து வருகிறது. இந்திய ஆட்சியாளர்களின் இந்த கேடுகெட்ட கொள்கையை எதிர்த்து இந்தியா மக்கள் இடதுசாரிகள் தலைமையில் வீரமுடன் எதிர்த்து வருவததால் அணுசக்தி திட்டம் ஈராக்கிற்கு படை அனுப்புவது உள்ளிட்ட திட்டங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கின்றன. உண்மை இவ்வாறிருக்க இந்தியா ஒரு துணை வல்லரசாக - பேட்டை ரவுடியாக வலம் வருகிறதாம்!அது சரி,

இந்தியா ஒரு அரை காலனி நாடு என்றால், நான்கு நாட்டு அடிமை நாடு என்றால் பாகிஸ்தான் என்ன சுதந்திர நாடா? இது பற்றி ம.க.இ.க. நிலை என்ன?இந்தியாவின் இறையாண்மைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆபத்து ஏற்படுகிறது என்று நாம் கூச்சல் எழுப்பினால் அய்யய்யோ இந்தியாவால் சுற்றியிருக்கும் குட்டி நாடுகளுக்கு எல்லாம் ஆபத்து என்று ஓலக் குரல் எழுப்புவது எந்த வர்க்கத்தின் நலனை காப்பதற்காக?மேலும் இந்திய சுதந்திரப்போரில் ஈடுபட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் எந்த தலைமையையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. அதாவது அனைவரும் இந்திய சுதந்திரத்திற்கு துரோகம் இழைத்தவர்கள். மேலும் ஏகாதிபத்திய அடி வருடிகள் யார்? இந்திய கம்யூனிஸ்ட் தலைமை உட்பட.

அப்படியென்றால் இவர்கள் யாருடைய வாரிசுகள்! இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட - தியாகவும் புரிந்தவர்களின் தியாகத்தை நாங்களே உயர்த்திப் பிடிக்கிறோம் என்று டமாரம் அடிக்கும் இந்த அல்பவாதிகளின் கட்சித் திட்டம் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி விடுகிறது.எனவே இவர்களுக்கும் இந்திய சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இவர்களது உண்மையான வர்க்க குணம் ஏகாதிபத்திய சீர்குலைவுவாத சேவை செய்வதே அதை உறக்க கத்தி வியாபாரம் செய்ய துணியும் தலைமையே ம.க.இ.க.

சந்திப்பு

http://santhipu.blogspot.com/

தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!

ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. திண்ணை நக்சலிசவாதிகளின் கட்சித் திட்டம் அபத்தங்களைக் கொண்ட கலவையாகவே உள்ளதை இதனை படிக்கும் யாரும் உணர்ந்து கொள்ள முடியும்! இந்நிலையில் அவர்களது யுத்த தந்திரம், நடைமுறைத் தந்திரம் எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்களாகவும், உயிர்பில்லாத பிணவாடை அடிப்பதாகவுமே உள்ளது. மேலும் 1969க்கு பிறகு நக்சலிசம் என்ற பெயரில் உருவான திரிபுவாத தத்துவத்தின் மற்றொரு வாந்தியெடுப்பாகவே TNOC யின் திட்டம் உள்ளது.

(சி.பி.ஐ.-எம்-எல்) TNOC.யின் திட்டம் 31வது பிரிவு இந்தியாவில் உள்ள ஆளும் கட்சிகள் பற்றி ஒரு பெரிய பிரசங்கமே செய்கிறது. இதனை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

"ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகள் என்ற பெயர்களிலும் பல்வேறு கூட்டணிகளாகவும் வரும் இந்திரா காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஜனதா, ஜனதாதளம் போன்ற கட்சிகள் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் - நிலப்பிரபுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கக் கட்சிகளாகும். இவைகள் அரசு எந்திரம் போன்று தாக்கி அழிக்கப்பட வேண்டியவையாகும். "
"தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகள் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்ய எப்போதும் காத்திருப்பவை; பரந்துபட்ட மக்களைத் தம்பின்னே திரட்டி ஆளும் வர்க்கங்களின் சேவையில் வைக்கும் இவை புரட்சிக்கு எதிரான பாத்திரமாற்றுகின்றன. "

அதாவது இந்திய சுதந்திரப்பேரில் தலைமை தாங்கிய பெரு முதலாளித்துவ காங்கிரஸ் தலைமை ஆட்சி அதிகாரத்தை தன் கைக்கு மாற்றிக் கொண்டபோது இந்தியாவின் ஏகபோக கட்சியாக மலர்ந்தது. சர்வ அதிகாரங்களையும் கொண்ட ஏகபோக கட்சியாக அரியணையில் அமர்ந்தது. நேரு முதல் இந்திரா வரை அன்றைய பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த அவர்களால் முதலீடு செய்ய முடியாத பெரும் தொழில்களை பொதுத்துறையாக மாற்றி சேவை செய்தது. இதனை சோசலிச கருத்தாக்கத்தோடு இணைத்தும் கொண்டது. எனினும் இதற்காக பெரும் உதவிகளை செய்தது சோவியத் யூனியன் - இது வேறு விசயம்...
இவ்வாறு ஆட்சியதிகாரத்தின் உச்ச நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி அதன் தொடர்ந்த முதலாளித்துவ கொள்கையால் சுதந்திர இந்திய மக்களை காப்பாற்ற முடியாமல் படிப்படியாக திவால் ஆனது. பின்னர் இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தபின்னணியில் அதன் பல மாநிலங்கள் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து வேறு பல மாநில முதலாளித்துவ கட்சிகளுக்கு தலைமை மாற்றப்பட்டது.

இந்த வளர்ச்சியின் வழியாக இடையில் வந்த ஜனதா (இதற்குள் இன்றைய பா.ஜ.க. - ஜனசங்கம் ஒளிந்துக் கொண்டிருந்தது.) பின்னர் இக்கட்சியும் இருந்த இடம் தெரியாமல் சிதறிப்போய் காற்றில் கலந்தே போய்விட்டது. அதேபோல் அதன் அடுத்த வாரிசாக தோன்றிய ஜனதா தளமும் முடக்குவாத நோய் ஏற்பட்டு மரணித்து விட்டது. அதாவது, தற்போது ஜனதாவும், ஜனதா தளமும் முற்றிலும் மறைந்து அதற்கு கல்லறைக்கே அனுப்பப்பட்டு விட்டது இந்திய உழைப்பாளி மக்களால்.ஆனால், பாவம் இந்த ம.க.இ.க. கும்பல் செத்துபோன ஜனதா கட்சியையும், ஜனதா தளத்தையும் உயிர் கொடுத்து மீண்டும் தாக்கி அழிக்கப்படப்போகிறதாம்!

காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை என்ன? தனியொரு ஜாம்பவானாக வலம் வந்த காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மாநில கட்சிகளின் கை - கால்களைப் பிடிக்காமல் ஏன் இடதுசாரிகளின் காற்றுப் படாமல் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலைக்கு தேய்ந்து போய்விட்டது - அந்த கட்சியையும் முற்றிலும் செலிழக்க வைத்து அது தோன்றிய இடத்திற்கே செல்ல வைப்பதற்கான முயற்சியை சி.பி.எம். உட்பட இடதுசாரி - மதச்சார்பற்ற கட்சிகள் முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றன.

மேலும் பா.ஜ.க. என்ற விஷ ஜந்து இந்திய மக்களின் இரத்தங்களை மதவெறி என்ற பெயரால் குடித்து ஊதி பெருக்க நினைக்கும் அட்டையாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கட்சியின் ஆட்சிக் கனவும் வெறும் கனவாக மாற்றியதற்கு முழு சொந்தக்காரர்கள் மதச்சார்பின்மையை தங்களது உயிர் நாதமாக போற்றும் இந்திய மக்களே. இந்த விஷ ஜந்துவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அதனை செயலாக்கி வருவது சி.பி.எம். உட்பட்ட இடதுசாரி ஜனநாயக சக்திகளே. இதில் ம.க.இ.க.-எஸ்.ஓ.சி. எல்லாம் வெறும் பத்திரிகை கூச்சலோடு நின்று விட்டதைதான் இந்திய மக்கள் கண்டுள்ளனர். இந்த போலி நக்சலிசவாதிகள் குறைந்த பட்சம் இந்த மதவாத - பா.ஜ.க.வை விரட்டுவதற்கு கூட துரும்பைக் கூட எடுத்து வைக்கவில்லை.

ஆக மொத்தத்தில், இவர்களது கட்சித் திட்டம் எதிர் காலத்தில் எந்த கட்சிகளை தாக்கி அழிக்க வேண்டும் என்று கனா கண்டுக் கொண்டிருக்கிறதோ? அதனை இந்திய உழைப்பாளி மக்கள் எப்போதோ செய்து முடித்து விட்டார்கள். அதன் மிச்ச மீதியையும் விரைவில் புதை குழிக்கு அனுப்புவார்கள்.

இந்த உண்மையைக் கூட அறியாத அப்பாவித் தலைமையாக ம.க.இ.க. மறைமுகத் தலைமை இருப்பதைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? குறைந்த பட்சம் அவர்களது நகல் திட்டத்தையாவது தற்போதைய சூழலுக்கு ஏற்ப அப்டேட் செய்யலாம். மொத்தத்தில் இது பழைய மொந்தையில் உள்ள பழைய கல்லே தவிர வேறல்ல!

இந்த வரிசையில், பல்லாண்டுகளாக இந்திய ஜாதியடிமைத்தனத்தின் விளைவாக ஒடுக்ப்பட்டு ஓரம் கட்டப்பட்டு தீண்டத்தகாதவர்களாக மாற்றிய தலித் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காக அன்றாடம் உயிர்ப்பலிக் கொடுத்து, தியாகம் செய்து வருகையில் அவர்களைப் பற்றி ம.க.இ.க. மறைமுகத் தலைமையான எஸ்.ஓ.சி.யின் திட்டம் கீழ்கண்டவாறு கூறுவதை ஆழ்ந்து படியுங்கள். அப்போதுதான் தெரியும் இவர்களது உண்மை முகம் என்னவென்று?

".... தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும், கட்சிகளும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளாகக் கருதப்பட வேண்டும். இவைகள் அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத வெறிகளைத் தூண்டி சலுகைகளுக்காகப் போராடும் கட்சிகள் எதிரிக் கட்சிகளாகும். "

தாழ்த்தப்பட்டோரின் துயரமான வாழ்க்கைக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக டாக்டர் அம்பேத்கார், ஜோதிபா பூலே, இரட்டை மலை சீனிவாசன் உட்பட தலித் மக்களின் விடுதலைக்காக போராடிய தலித் தலைவர்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கினார்கள். அவர்களது வழிவந்த அமைப்புகள் இன்றைக்கும் நாடு முழுவதும் தலித் எழுச்சிக்காக பெரும் குரலெழுப்பி வருகின்றன. மேலும், சுதந்திர இந்தியாவில் குறைந்தபட்சம் கிடைத்த கல்வியறிவால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் உந்தப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க அமைப்பாக திரள்கின்றனர். இவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை மையமாக வைத்து பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததிய மக்கள் நல அமைப்புகள்... பழங்குடியின அமைப்புகள் என பல கட்சிகள் நாடு முழுவதும் தோன்றியுள்ளன. இந்த கட்சிகளின் தோற்றம் பல்லாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களிடையே புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது.

மேலும் ஜாதி அடிமைத்தனத்தின் விளைவாக - நிலப்பிரபுத்துவ பண்ணையடிமைத்தனமான சுரண்டலின் விளைவகவும், மனு அதர்த நால்வருண ஜாதியமைப்பு முறையாலும் ஒடுக்கப்பட்ட இம்மக்கள் உழைப்பாளி மக்களின் வரிசையில் உள்ள மிக கடைசிப் பிரிவினராகவே உள்ளனர்.வர்க்க ரீதியாகவும் - ஜாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலித் அமைப்புகளையும், கட்சிகளையும் - குட்டி பூர்ஷ்வா கட்சிகள் என்று அடையாளப்படுத்துகிறது ம.க.இ.க. அறிவுக் கொழுந்து தலைமை! ஆஹா இந்தியாவில் உள்ள 25 கோடி தலித்துக்கள் எல்லாம் எப்படி குட்டி முதலாளிகளானார்கள் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். ஒருவேளை இவ்வாறு சித்தரிப்பதன் மூலம் அவர்கள் பிரச்சினைகளை கண்டுக் கொள்ளாமல் ஓடி ஒளிந்துக் கொள்ளலாம் என்று கருதுகிறது போலும். இந்தக் காரணத்தால்தான் இவர்கள் இடஒதுக்கீடு பிரச்சினையில் எதிர்ப்பு நிலையை மேற்கொண்டு தங்களது பார்ப்பனீய முகத்தை வெளிக் காட்டிக் கொண்ட அவலத்தை பல தமிழ் அமைப்புகள் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது.

அதே சமயம், தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகளாம்! அதாவது, தி.மு.க. - அண்ணா தி.மு.க.வுக்கு எந்த வர்க்க நலனும் இல்லையாம்! இந்த மாநிலக் கட்சிக்குள் ஒளிந்துக் கொண்டிருப்பது மாநில முதலாளிகளை பிரதிநிதித்துப்படுத்தும் நிலைபாடுகளே! தற்போது இதனையும் மீறி இவர்கள் பெரு முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளதையும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை காணத் தவறுகிறது! ஆசியாவில் முதல் பணக்காரர்கள் வரிசையில் திராவிட இயக்கத் தலைமை இருப்பது குறித்து அறிந்து கொள்வதற்கு கண்ணாடி ஏதும் தேவையில்லை!

நிலைமை இவ்வாறிருக்க தலித் உழைப்பாளி மக்களை குட்டி பூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க. மறைமுகத் தலைமையிடம் எந்தவிதமான கொள்கைத் தெளிவும் - வர்க்கத் தெளிவும் இல்லாததைதான் காட்டுகிறது! இவர்களது இந்த தலித் விரோத நிலைபாடுகளே இவர்கள் பார்ப்பனீயத்தின் பின்னணியாக - ஏகாதிபத்திய சீர்குலைவாதிகளாக செயல்படுவதற்கு சாட்சியாக விளங்குகிறது.

சந்திப்பு

http://santhipu.blogspot.com/

ம.க.இ.க. தத்துவக் குருடர்களும் புரட்சிகர அரசியலும்!

ம.க.இ.க.வின் மறைமுகத் தலைமையான (மாநில ஒருங்கிணைப்புக்குழு - இந்திய பொதுவுடைமை கட்சி - மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியென அழைத்துக் கொண்டு திரிபுவாதத்தையும், சீர்குலைவுவாதத்தையுமே முதலாக கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக செயலாற்றிக் கொண்டு வருவதை முன்பதிவுகளில் பார்த்தோம். இந்திய அரசியலையும் - அதன் வர்க்கத் தன்மையையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றமே, அதன் ஒட்டுமொத்த நடைமுறை தந்திரம் தொடர்பான நிர்ணயிப்புகளுக்கும் அடிப்படைத் தவறாக அமைந்துள்ளது.இந்திய சுதந்திரத்தை போலி சுதந்திரமாக பார்ப்பதும், இன்னமும் இந்தியா அரை காலனி - நான்கு நாட்டு அடிமை சேவகம் - மறு காலனி என்று தொடர்ந்து காலனி மோகத்தில் குளிர் காய்வதால் இந்திய பாராளுமன்ற அரசியலிருந்து துறவறம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் அதன் தத்துவ ஊனம் அடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து “பாராளுமன்றம் பன்றித் தொழுவம்”, “போலி தேர்தல்”, “போலி பாராளுமன்றம்”, “ஓட்டுப் பொறுக்கிகள்” என்று அடுக்கடுக்காக வாய்ஜாலம் பேசி தேர்தல் அரசியலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இந்திய மக்களின் விரோதிகள் நாங்கள் மட்டுமே புரட்சிக்காரர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை பம்மாத்து செய்வதோடு அதற்கு மாற்றாக ஆயுதப் புரட்சி என்று கூறி அவமானப்படுத்துகிறது. இவர்களது பாராளுமன்ற அரசியல் குறித் குறித்து எஸ்.ஓ.சி. திட்டம் 26வது பிரிவு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“இந்தியப் பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் தங்களின் கொடுங்கோன்மைச் சர்வாதிகாரத்தை மூடி மறைக்கும் பொருட்டு நாடாளுமன்ற ஜனநாயகம் என்று அழைத்துக் கொள்ளும் முகத்திரையைப் பயன்படுத்துகின்றன. சாராம்சத்தில் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களின் விசுவாசமான ஊழியர்களான திரிபுவாதிகளும், நவீன திரிபுவாதிகளும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்று அழைத்துக் கொள்ளும் அதிகாரமற்ற அமைப்பை மக்களின் விருப்பங்களுக்கான கருவி என்று ஒப்பனை செய்கிறார்கள். சோசலிசத்திற்கான பாதைiயாக சமாதான நாடாளுமன்றப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்களது துரோகத்தனத்தை ‘சோசலிசத்திற்கான இந்தியப் பாதை’ என்று வர்ணிக்கிறார்கள். வர்க்கமற்ற அரசியல், வர்க்கமற்ற சோசலிசம் என்று வழிகாட்டுதல் நமது நாட்டின் பரந்துபட்ட மக்களை புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து திசை திருப்பும் முதலாளியத் தந்திரமாகும்....”

இவ்வாறு கூறுவதன் மூலம் மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து தன்னை மிக உயர்வுகாக காட்டிக் கொள்ள முனைகிறது இந்த தத்துவ குருட்டுப் பூனை. மேலும் திரிபுவாதிகள் என்று இடதுசாரிகளை குற்றம் சுமத்துவது சாட்சாத் இவர்களுக்கே மிகச் சரியாக பொருந்துகிறது. குறிப்பாக, இவர்களது வாதப்படியே யார் வர்க்கமற்ற அரசியல் என்று சொல்கிறார்கள்? சமாதானமான நாடாளுமன்றப் பாதை மட்டுமே புரட்சிகரப் பாதை என்று வர்ணித்துள்ளார்கள்? என்று நமக்குத் தெரியவில்லை! சி.பி.எம். தனது கட்சித் திட்டத்திலோ அல்லது கொள்கை அறிக்கையிலே இவ்வாறு எதையும் கூறவில்லை. இவர்களது கற்பனை கோட்டைக்கு அளவில்லாமல் போனதன் விளைவும் தனது அணியினை திருப்திப்படுத்துவதற்காக ஆயுதப் போராட்டம் ஒன்றே தீர்வு என்று கூறி திண்ணை வேதம் ஓதுகிறது இந்த பார்ப்பனீயத் தலைமை!பாராளுமன்ற அரசியல் குறித்து மாமேதை லெனின் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்! விஞ்ஞானப் பூர்வ கம்யூனிசத்திற்கு பாதை அமைத்தவர் தோழர் லெனின். ரஷ்ய மற்றும் உலக அனுபவங்களின் மூலம் கம்யூனிச தத்துவத்திற்கு பாதையமைத்த லெனின் “இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு” என்ற புத்தகத்தில் - முதலாளித்துவ பாராளுமன்றங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளலாமா? என்ற துணைத் தலைப்போடு இது குறித்து விரிவாக ஆராய்கிறார். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்:“முதலாளித்துவப் பாராளுமன்றங்களையும், இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிலும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்த ஆகவேண்டும்”

தோழர் லெனின் அவர்களின் மேற்கண்ட நிலைபாடு ம.க.இ.க. மறைமுகத் தலைமைக்கு மட்டும் பொருந்தாது! ஏனெனில் இவர்கள் இந்தியப் புரட்சியை வெறும் கற்பனையில் மட்டும் பார்ப்பதால் - தங்களது கற்பனை வளத்தின் மூலமே இந்திய அரசை வெகு சீக்கிரத்தில் தூக்கியெறியும் அசுர பலத்தோடு இவர்கள் இருப்பதாக எண்ணிக் கொண்டு, வெகுஜனங்களின் எளிய உணர்வுகளை அரக்கத்தனமான காலில் போட்டு மதித்து விட்டு, போலி பாராளுமன்றம் என்று புரளி பேசி, மக்களின் அரசியல் உணர்வுகளை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியும் - திசை திருப்பும் செயலினைத்தான் இவர்களிடம் பார்க்க முடிகிறது.மேலும் இதுபோன்ற வாய்ச்சவடால் அமைப்புகள் குறித்து லெனின் கீழ்வருமாறு உரைக்கிறார்:
“பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். இவ்வாறு வேலை செய்யாவிடில், நீங்கள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்.”அதாவது, ஜெர்மானிய நிலைமையை முன்வைத்து அவரது வாதம் இங்கே கட்டமைக்கப்பட்டாலும், தற்போதைய இந்திய நிலைமைக்கும் இது முற்றிலும் பொருந்தும். இந்தியாவில் உள்ள 110 கோடி இந்திய மக்களில் பெரும் பகுதியினர் கல்வியறிவு பெறாதோராய், மிகவும் வறிய நிலையில் வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற நிலையில் இருப்பதைத்தான் காண்கிறோம்.

னவே இத்தயை எளிய மக்களின் அரசியல் உணர்வு மட்டம் தனிபர் ஹீரோயிசம் சார்ந்ததாகவே இருக்கும்.எனவே இத்தகைய எளிய மக்களிடம் வெளிப்படையாக செயலாற்றி அவர்களது அரசியல் உணர்வு மட்டத்தை உயர்த்துவதற்கு மாறாக, ஆயுதப் புரட்சி என்று பேசுவது தொழிலாளி வர்க்கத்தின் குரலை வெளிப்படுத்துவதாக அமையாமல் தங்களின் உள்ளுனர்வு அடிப்படையில் இயங்கும் கற்பனாவாத தத்துவத்தைதான் ம.க.இ.க.வினரிடம் காண முடிகிறது. இது குறித்து தோழர் லெனின் கூறுவதை நோக்குங்கள்.

“ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள “இடதுசாரிகள்” இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது பிழையை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம் தாம் ஒரு சிறு குழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத்துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி வெகுஜனங்களது கட்சியல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர்.”

மேற்கண்ட நிர்ணயிப்பின்படி நாம் தொடர்ந்த வலியுறுத்துவது போல் ம.க.இ.க. நக்சலிச கும்பல் ஒரு குழுவேயன்றி பாட்டாளி வர்க்க கட்சியல்ல என்பது நிருபனமாகிறது.மேலும் தோழர் லெனின் கூறுவதை கேளுங்கள்:

வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மை இல்லாமல், இந்த மனப்பான்மை வளர்வதற்கு அனுசரணையான நிலைமைகள் இல்லாமல், புரட்சிகரப் போர்த்தந்திரம் ஒரு நாளும் செயல் நிலைக்கு வளர்ச்சியுற முடியாது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் ருஷ்யாவில் நீண்ட நெடிய கொடிய அனுபவமானது, புரட்சிகரப் போர்த்தந்திரத்தைப் புரட்சிகர மனப்பான்மையின் அடிப்படையில் மட்டும் உருவாக்கி விட முடியாதென்ற உண்மையை எங்களுக்கு போதித்துள்ளது.”

ம.க.இ.க. குழுவினர் லெனினின் பிறந்த நாளுக்கு அவரது எண்ணங்களில் ஒருசிலவற்றை போட்டு விட்டு தங்களைப் புரட்சிகரமானவர்களாக நிலைநாட்டிக் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் அவரது சிந்தனையை குழிதோண்டிப் புதைப்பதைத்தான் இவர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவுக்கான புரட்சியை சீன பாணியைக் கொண்டு காப்பியடிக்க முற்படுகிறார்களே ஒழிய எதார்த்த அனுபவங்களை எந்த உரை கல்லிலும் பரிசீலிப்பதில்லை. இவர்களைப் போன்றே நக்சலிசம் பேசிய லிபரேசன் குழுவினர் தங்களது ஒட்டுமொத்த திட்டத்தையும் தற்போது தலைகீழாக மாற்றி விட்டனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. ஆனால் இவர்களது கற்பனையில் மட்டும் இந்தியாவில் ஏதோ மாபெரும் புரட்சிகர எழுச்சி நிலவி வருவதாகவும் அதற்கு தடையாக மற்றவர்கள் இருப்பதாகவும் கணா கண்டுக் கொண்டிருக்கிறது.ம.க.இ.க.

தலைமை வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மையை காண்பதற்கு பதிலாக தங்களுக்குள் மட்டுமே அது உயர்வாக இருப்பதாக மதிப்பிடுவதே அதன் சீர்குலைவை வெளிப்படுத்துகிறது. மேலும் இவர்களது போலி பாராளுமன்ற வாதம் எப்படிப்பட்ட அயோக்கியத்தனமானது என்பதை லெனினின் வார்த்தைகள் மூலமே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.“பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதால் மட்டுமோ, பாராளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதால் மட்டுமோ ஒருவர் தமது “புரட்சிகர” மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டு விடுவது மிக மிகச் சுலபம். ஆனால் இந்தச் சுலபத்தின் காரணமாய், இது கடினமான, மிக மிகக் கடினமான ஒரு பிரச்சினைக்குரிய தீர்வாகி விடுவதில்லை.

மேலும் தோழர் லெனின் இது குறித்து விளக்கும் போது,நீங்கள் ஒரு புதிய சமுதாயம் சமைக்க விரும்புகிறீர்கள். ஆயினும் திடநம்பிக்கையும் பற்றுதியும் கொண்ட வீரமிக்க கம்யூனிஸ்ட்டுகளாலான சிறந்த பாராளுமன்றக் குழு ஒன்றினைப் பிற்போக்குப் பாராளுமன்றத்தில் நிறுவிக் கொள்வதிலுள்ள சிரமங்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள்! இது சிறு பிள்ளைத்தனமானதல்லவா?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் நிலவும், ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துக் கொண்டுள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்தவ - நிலப்பிரபுத்துவ சமூகத்தை தூக்கியெறிந்து - மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்க அரசை ஆட்சியில் அமர்த்துவது என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்றுகிறது. இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான நடைமுறைத் தந்திரத்தின் ஒரு பகுதியாகவே மக்கள் பங்கேற்கும் நாடாளுமன்ற அரசியலிலும் பங்கேற்கிறது. அதற்காக நாடாளுமன்ற பாதையின் மூலமாகவே புரட்சியை நடத்தி விடுவோம் என்று எங்கும் சி.பி.எம். கூறவில்லை. மேலும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை அவர்களது கூடாரத்திற்குள்ளே நின்று வெகுவாக அம்பலப்படுத்த முடியும் என்பதோடு, சில - பல விஷயங்களில் ஏழை - எளிய மக்களுக்கான நிவாரணத்தையும் பெற்றுத்தர முடியும் என்ற கடமையைத்தான் சி.பி.எம். நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதற்காக மத்திய அரசியல் பதவிக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலையவில்லை! இரண்டு முறை பிரதமர் பதவி உட்பட மத்திய மந்திரிப் பதவிகள் தேடி வந்த போது அதை வேண்டாம் என்று உதறித் தள்ளிய கட்சி சி.பி.எம்.! இதையெல்லாம் வேண்டும் என்றே புறம் சொல்லி - தரம் தாழ்த்தும் குணம் படைத்த ம.க.இ.க. தலைமை தங்களது தொண்டர்களை தேர்தல் பாதைக்கு தள்ளி விட்டால் அவர்கள் முதலாளித்துவ கட்சிகளைப் போல் சீரழிந்து விடுவார்களோ என்ற சந்தேகப் பார்வைதான் விஞ்சுகிறது!மேலும், முதலாளித்துவ பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுப்பதற்காக தேர்தலில் வெறும் சீட்டுக்காகவும், பெற்ற சீட்டுக்காக கோடிக்கணக்கில் தனிநபரே செலவழிக்கும் இழிவான முதலாளித்துவ செயலை சி.பி.எம். மேற்கொள்வதில்லை. எந்த இடத்திற்கு - யாரை கட்சி நிறுத்துகிறதோ அவர்களுக்கான தேர்தல் செலவு முழுவதையும் கட்சியே ஏற்கிறது. (மக்கள் பணம்) அவ்வாறு தேர்வு செய்யப்படும் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கும் சம்பளம் முழுவதையும் கட்சியிடமே ஒப்படைத்து விட வேண்டும். அதுதான் இதுவரை நடந்துக் கொண்டிருக்கிறது. முழுநேர ஊழியர் முதல் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர் வரை புதியதாக வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட கட்சியிடம் அனுமதி பெற்ற பிறகே கட்ட முடியும்!

எனவே பாராளுமன்றத்தை பன்றித் தொழுவம் என்று கூறி சி.பி.எம். மீது சேறை அள்ளி வீசும் வாய்ஜாலத்தால் மட்டும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை புரட்சிகர சக்தியாக மாறி விட முடியாது! மாறாக அதன் அரசியல் நடைமுறைத் தந்திரம் ஏகாதிபத்திய சீரழிவிற்கும் - கம்யூனிசத்தை மக்களிடம் இருந்து பிரிக்கும் தந்திரத்திற்குமே வழிவகுக்கும். மொத்தத்தில் சீரழிந்த அரசியலுக்கு மொத்த குத்தகை எடுத்திருப்பவர்களே ம.க.இ.க. குழுவினர்.மேலும் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் ஜார் காலத்தில் இருந்த படு பிற்போக்கான டூமாவில் சில நேரங்களில் புறக்கணித்தும் சில நேரங்களில் ஆதரித்தும் பணியாற்றி வந்தனர். இதற்கான அடிப்படையாக அமைந்தது. ஒரே காரணிதான். ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கம் புரட்சிகர எழுச்சி பெற்றிருக்கும் தருணத்தில் டூமாவை புறக்கணித்தது. மாறாக, புரட்சிகர தாகவும் சோர்வுற்றிருந்த தருணத்தில் பாராளுமன்றத்தை பயன்படுத்தியது. இத்தகைய எந்த அனுபவத்தையும் நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிப்பது ம.க.இ.க.வின் இளம் பிள்ளை வாதத்தைத்தான் காட்டுகிறது!

தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது! நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது! என்று மார்க்சிய ஆசான் ஸ்டாலின் கூறியதற்கு மொத்தமாக பொருந்துபவர்கள் .... குழுவினரே!

சந்திப்பு

http://santhipu.blogspot.com/

ம.க.இ.க. காலனிய சோசலிசமும் கோயபல்ஸ் பிரச்சாரமும்!

.... மறைமுகத் தலைமை (CPI-ML [SOC]) நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தனது கும்பலை திருப்திப்படுத்துவதற்காக பாசிச ஹிட்லரை மிஞ்சும் அளவிற்கு கோயபல்ஸ் பாணியில் சி.பி.எம்.க்கு எதிராக தனது பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறது.

குறிப்பாக தாங்களே இந்தியாவில் சோசலிசத்தை கொண்டுவரப் போகிறோம் என்று குத்தாட்டம் போடுகிறது.சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் தற்போதைய கட்டம் சோசலிசம் அல்ல என்று தோழர் ஜோதிபாசுவும், தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததை தொடர்ந்து, தண்ணீரில் மூழ்கப்போகிறவனுக்கு கிடைத்த சிறு மரக்கட்டையைப் போன்று கெட்டியாக பற்றிக் கொண்டது ம.க.இ.க. மறைமுகத் தலைமை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தை கைவிட்டு விட்டதாக ஓலமிடுகிறது. ஏகாதிபத்திய - முதலாளித்துவ மீடியாக்கள் இந்திய உழைக்கும் மக்களைப் பாதுகாக்கும் சி.பி.எம்.க்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எதற்கும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று தங்களது ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டிக் கொள்வதில் விந்தையேதும் இல்லை!
இருப்பினும் ம.க.இ.க. மறைமுகத் தலைமையின் சோசலிசத் திட்டம்தான் என்ன? என்பதையும் வாசகர்கள் தெரிந்து கொள்வது நல்லதல்லவா? அதை கொஞ்சம் இங்கே பார்ப்போம். எஸ்.ஓ.சி. கட்சித் திட்டம் இந்தியாவில் அவர்கள் மேற்கொள்ளப் போவதாக கூறும் புரட்சிக்கான திட்டம் குறித்து 46வது பிரிவு கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.


"இந்தியப் புரட்சியின் தற்போதைய கட்டம் அரை நிலப்பிரபுத்துவ - அரைக் காலனிய சமுதாயத்தை ஒழித்து, சோசலிச சமுதாயத்தை நிறுவுவதற்கு இடைப்பட்ட, மாறிக் கொண்டிருக்கும் ஒரு கட்டமாகும். அதாவது, புதிய ஜனநாயகப் புரட்சியின் கட்டமாகும். புதிய ஜனநாயக புரட்சியானது சோசலிசப் புரட்சிக்கான இன்றியமையாத முன் தயாரிப்பாகும். சோசலிசப் புரட்சியானது புதிய ஜனநாயகப் புரட்சியின் தவிர்க்க இயலாத பின்விளைவாகும். புதிய ஜனநாயகப் புரட்சியை முதலில் நிறைவேற்றுவதின் மூலம் மட்டுமே நமது நாடு ஒரு சோசலிச சமுதாயத்தை நிர்மாணிக்கும் கட்டத்திற்கு முன்னேற முடியும். "

மேற்கண்ட நிர்ணயிப்பின் மூலம் எஸ்.ஓ.சி. கும்பல் செய்யக்கூடிய புரட்சி எத்தகைய தன்மை வாய்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள். அதாவது, அரை அடிமை நாடாக இருக்கக்கூடிய இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவது. மேலும் அரை நிலப்பிரபுத்துவத்திலிருந்து விடுதலை கொடுப்பது! இதைதான் இவர்கள் புதிய ஜனநாயக புரட்சி என்று சொல்லுகின்றனர். இதன் மூலம் இவர்கள் வெப்படையாக சொல்லுவது என்ன? இவர்கள் செய்யப்போவது சோசலிசப் புரட்சியல்ல என்பதுதானே! அப்புறம் எப்படி இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தை கைவிட்டு விட்டது என்று கோயபல்ஸ் போன்று கதைப்பார்கள்! இதனை ஏகாதிபத்திய ஆதரவு சேவை என்று அழைக்காமல் எப்படி அழைப்பது! அல்லது மார்க்சியத்தை திரித்த இந்த திரிபுவாதிகள் தற்போது அவர்களது திட்டத்தையும் கூட திரிக்கத் துணிந்து விட்டனர் என்றுதானே அர்த்தம்.
இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் கூற வருவது என்னத் தெரியுமா? தற்போதைய ஆளும் வர்க்கமான பெரு முதலாளித்துவத்தை மேலும் பெருக்க வைப்பதற்கான புரட்சியையே இவர்கள் நடத்தப் போகிறார்கள். அதாவது முழுமையான முதலாளித்துவ புரட்சி. ஏனெனில் இவர்களது நிர்ணயிப்பின்படி தற்போது அரை காலனியும் - அரை நிலப்பிரபுவுமே ஆளும் வர்க்கமாக இருப்பதாக சித்தரிக்கின்றனர். எனவே இந்த பிற்போக்கு வர்க்கத்தை வீழ்த்துவதன் மூலம் முழுமையான முதலாளித்துவத்தையே இவர்கள் கட்டத் துடித்துக் கொள்கிறார்கள். இதுதான் இவர்களது மறைமுக சோசலிச முகம்!


மொத்தத்தில் இந்த ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பல் திரிபுவாதத்தையே தனது பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகிறது என்ற முடிவுக்கு வரலாம். இது கிடக்கட்டும்! இவர்கள் சோசலிசத்தை எப்போது கொண்டு வருவார்கள் என்பதற்கான விளக்கத்தையும் கொஞ்சம் பாருங்கள் அது இன்னும் வேடிக்கையாக இருக்கும்.


.... மறைமுக கட்சித் திட்டம்

பிரிவு 45-இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். இதையும் ஆழமாக படியுங்கள்
"...புதிய ஜனநாயகப் புரட்சி என்ற முதற்கட்டம் முழுமைபெற்ற உடனேயே இந்தியப் புரட்சியானது எத்தகைய இடைவெளியுமின்றி சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு செல்கிறது. சோசலிசப் புரட்சி எவ்வளவு துரிதமாக முழுமை பெறும் என்பது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும், நமது பலத்தின் அளவையும், உணர்வு பூர்வமாக, அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் பலத்தையும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் அமைந்த இந்திய உழைக்கும் மக்களின் ஐக்கியப்பட்ட அமைப்பின் பலத்தையும், உலக சோசலிச இயக்கத்தின் பலத்தையும் பொறுத்திருக்கும். கட்சி ஒரு தங்கு தடையற்ற புரட்சிக்காக நிற்கிறது. நமது கட்சியின் இறுதி நோக்கம் முதலாவதாக ஒரு சோசலிச சமுதாயத்தையும் பின்னர் ஒரு பொதுவுடைமைச் சமுதாயத்தையும் அதாவது வர்க்கங்களற்ற, சுரண்டலற்ற, போர்களற்ற சமுதாயத்தையும் நிறுவுவதாகும். "


அதவாது இந்தியாவில் இவர்கள் கூறும் திட்டத்தின் அடிப்படையில் சோசலிசம் எப்போது வரும் என்றால், 1. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அதிகரித்திருக்க வேண்டும்.2. இந்திய உழைக்கும் மக்களிடையே ஐக்கியப்பட்ட பலம் அதிகரிக்க வேண்டும்.3. உலக சோசலிச இயக்கம் இதற்கு சாதகமாக இருக்க வேண்டும்.இந்த மூன்று அம்சங்களும் இணைந்திருந்தால்தான் சோசலிச புரட்சி வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். இவை எப்போது சாத்தியம்! அதாவது, இன்றைக்கு உலகளவில் முன்னுக்கு வந்திருக்கும் முரண்பாடுகளில் பிரதானமாக இருப்பது சோசலிசத்திற்கும் - ஏகாதிபத்தியத்திற்குமான முரண்பாடே. எனவே ஏகாதிபத்தியத்தை பின்னுக்குத் தள்ளும் வரையில் இந்த முரண்பாடு நீடித்துக் கொண்டே இருக்கும். மேலும் இவர்களது வாதப்படி ரஷ்யா (தற்போது இல்லை) அது சமூக ஏகாதிபத்தியமாக மாறி விட்டது. சீனாவை இவர்கள் முழு சோசலிச நாடாக ஏற்கவில்லை. அப்புறம் மிச்சம் மீதி இருப்பத குட்டி குட்டி நாடுகளாக கியூபா, வியட்நாம், வடகொரியா, லாவோஸ் போன்றவைகளே... இந்த நிலையில் உலக சோசலிச பலம் எவ்வாறு அதிகரிக்கும் என்று தெரியவில்லை? அல்லது இந்தியாவிற்கு முன்னால் உலகில் வேறு பல நாடுகளில் சோசலிசம் வரும் என்ற கனவு காண்கிறார்களா என்றும் தெரியவில்லை. எனவே இந்த ம.க.இ.க. வின் சோசலிசம் என்பது வெறும் கற்பனாவாத சோசலிசமே! என்ற முடிவுக்கு வரலாம்.
உண்மை இவ்வாறிருக்க, சி.பி.எம்.க்கு எதிரான இவர்களது கோபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் இவர்கள் பெரும் திருப்தி அடைவதாக மட்டுமே தெரிகிறது. நாம் இவர்களது கட்சித் திட்டம் தேய்ந்து போன - நொண்டிக் குதிரை என்று விமர்சித்தால்... நந்திகிராம் - சிங்கூர் என்று பாட்டு பாடுகிறார்கள்.
இது குறித்து ம.க.இ.க. சிந்தனைப் புலி நண்பர் அசுரன் எழுதியுள்ளதை கவனியுங்கள்.


நந்திகிராமிலும், கேரளாவிலும் செய்து வருவதா? ஏன் கேட்கிறேன் என்றால் தனியுடைமையை (உற்பத்தி கருவிகளில்) அழிப்பது என்பதன் பொருள் நந்திகிராம் மக்களின் தனியுடைமையை அழித்து அதை டாடா சலிம் உள்ளிட்டவர்களின் உடைமையாக்குவது என்று போலிட் பிரோவில் முடிவெடுத்து சொன்னால் அதை சந்திப்பு இங்கு பிரசூரிக்கும் அபாயம் உள்ளது(அபாயம் என்ன அபாயம் அல்ரெடி அதெல்லாம் செஞ்சி முடிச்சி அந்த இடத்துல புல்லே முளைச்சிருச்சி - பார்க்க சந்திப்பின் பழைய பதிவுகள்).
நந்திகிராம் - சிங்கூர் குறித்து ஏற்கனவே விரிவான பதிவுகள் சந்திப்பில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து எங்களது நிலைபாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால், மூழ்கப் போகும் ஓட்டைப்படகில் பயணம் செய்யும் ம.க.இ.க. இன்னமும் அதைப் பிடித்தே தொங்கிக் கொண்டிருக்கிறது.இந்த இடத்தில் சுருக்கமாக இரண்டு - மூன்று கேள்விகளை மட்டும் எழுப்ப விழைகிறேன்.


ம.க.இ.க. மறைமுகத் திட்டப்படி இந்தியா ஒரு அரை காலனி நாடு, அதுவும் நான்கு நாடுகளுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு. இந்த காலனியாதிக்கத்தை தூக்கியெறிவதற்காக அவதாரம் எடுத்துள்ள அமைப்புதான் ம.க.இ.க.! இவர்களது வாதப்படியே வைத்துக் கொண்டால், ஒரு காலனி நாட்டிற்குள் - அதுவும் மாநிலத்திற்குள் சோசலிசம் இருக்க முடியுமா? மேற்குவங்கம், கேரளா, திரிபுரா இந்த மூன்று மாநிலங்களில் ஏதோ சி.பி.எம். தலைமையில் சோசலிச ஆட்சி நடைபெறுவதாக அறிவித்தது போல் ஒப்பாரி வைப்பது அவர்கள் ஏற்றுக் கொண்ட திட்டத்திற்கு எதிர்வினையாக அமையவில்லையா?
மேற்குவங்கத்தில் 25 ஆண்டு காலம் முதல்வர் பொறுப்பில் இருந்த தோழர் ஜோதிபாசு மாநில அரசின் அதிகாரம் குறித்து இரத்தினச் சுருக்கமாக கூறியது என்ன தெரியுமா? அது ஒரு பெரிய முனிசிபாலிட்டி... அவ்வளவுதான். எந்தவிதமான நிதியதிகாரமோ அல்லது தொழில் வளர்ச்சியை சுயேச்சையாக ஏற்படுத்துவதற்கான அதிகாரமே இல்லாத இந்திய அரசின் முதலாளித்துவ அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் அமைப்புகளே மாநிலங்கள். இந்த மாநில அரசில் பங்கேற்பது என்பது முதலாளித்துவ திட்டங்களுக்கு உட்பட்டு மிகச் சிறிய நன்மைகளை மட்டுமே இந்த மக்களுக்கு செய்ய முடியும்.
அந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு கிடைத்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி மேற்குவங்கம், கேரளா, திரிபுராவில் நாட்டிற்கே முன்னுதாரணமாக 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் உட்பட உழைக்கும் மக்கள் பயனடையும் விதத்தில் நில விநியோகம் செய்து பெரும் பகுதி உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது.அதேபோல் பஞ்சாயத்தில் 50 சதவிகித நிதியை ஒதுக்கி - அதிக அதிகாரங்களை வழங்கியதோடு, தலித் மற்றும் பெண்களின் அரசியல் ரீதியான பங்கேற்பை ஊக்குவித்துள்ளது.கல்வி ரீதியாகவும், சிறு தொழில்களைப் பாதுகாக்கவும், தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கவும் நாட்டிலேயே முன்னணியில் நிற்கிறது.இந்தப் வரிசையில் தற்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடலின் ஒரு பகுதியாகவே சிங்கூர் - நந்திகிராம் திட்டமிடல் முன்னுக்கு வந்தது. படித்து முன்னேறியுள்ள உழைக்கும் மக்களின் பிள்ளைகளை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்துவதற்கு ஒரு மாநில அரசு என்ற முறையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த மாக்கான்கள்... இல்லை... இல்லை இவர்கள் கடப்பாரையோடும், கலப்பையோடும்தான் இருக்க வேண்டும் என்று உறுமுகிறார்கள். இப்படித்தான் இவர்கள் உற்பத்தி சக்தியை வளர்த்தெடுப்பார்கள் போலும்...


எனவே, ம.க.இ.க. தலைமை இந்திய அரசைப் பற்றிய நிர்ணயிப்பில் ஏற்பட்ட கோளாறு... முதலாளித்துவ சோசலிசத்தை உயர்த்திப் பிடிப்பதில் போய் முடிந்துள்ளது.
இறுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் நிறைவேற்ற உள்ள மக்கள் ஜனநாயகப் புரட்சியில், ஏகாபத்தியத்துடன் உறவு கொண்டுள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ நிலப்புரக்களை ஒழிப்பதுதான் முதற் கடமையாக கொண்டுள்ளது. இந்திப் புரட்சியின் முதல் கட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டியதோடு முடிந்து விட்டது. தற்போது இரண்டாவது கட்டத்தில் இந்தியா நின்றுள்ளது. மூன்றாவது கட்டத்தில்தான் சோசலிசத்தை நோக்கிய பயணம் துவங்கும். இறுதிக் கட்டமே கம்யூனிசம்.


இந்த உண்மையின் அடிப்படையிலேயே தோழர் ஜோதிபாசுவும், தோழர் புத்ததேவும் தங்களது மாநிலத்தில் தனியார் மூலதனத்தை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் தற்போதைய கட்டம் சோசலிசத்திற்கானது அல்ல என்று தெளிவாக உரைத்தார்கள். இதனை மாக்கான்கள் திரித்து தனது ஏகாதிபத்திய சேவையை நன்றாக ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய தொழிலாளி வர்க்கம் ஊளையிடுபவர்கள் பின்னால் ஒரு போதும் இருந்தது கிடையாது!

சந்திப்பு

http://santhipu.blogspot.com/