குறிப்பாக தாங்களே இந்தியாவில் சோசலிசத்தை கொண்டுவரப் போகிறோம் என்று குத்தாட்டம் போடுகிறது.சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் தற்போதைய கட்டம் சோசலிசம் அல்ல என்று தோழர் ஜோதிபாசுவும், தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததை தொடர்ந்து, தண்ணீரில் மூழ்கப்போகிறவனுக்கு கிடைத்த சிறு மரக்கட்டையைப் போன்று கெட்டியாக பற்றிக் கொண்டது ம.க.இ.க. மறைமுகத் தலைமை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தை கைவிட்டு விட்டதாக ஓலமிடுகிறது. ஏகாதிபத்திய - முதலாளித்துவ மீடியாக்கள் இந்திய உழைக்கும் மக்களைப் பாதுகாக்கும் சி.பி.எம்.க்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எதற்கும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று தங்களது ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டிக் கொள்வதில் விந்தையேதும் இல்லை!
இருப்பினும் ம.க.இ.க. மறைமுகத் தலைமையின் சோசலிசத் திட்டம்தான் என்ன? என்பதையும் வாசகர்கள் தெரிந்து கொள்வது நல்லதல்லவா? அதை கொஞ்சம் இங்கே பார்ப்போம். எஸ்.ஓ.சி. கட்சித் திட்டம் இந்தியாவில் அவர்கள் மேற்கொள்ளப் போவதாக கூறும் புரட்சிக்கான திட்டம் குறித்து 46வது பிரிவு கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.
"இந்தியப் புரட்சியின் தற்போதைய கட்டம் அரை நிலப்பிரபுத்துவ - அரைக் காலனிய சமுதாயத்தை ஒழித்து, சோசலிச சமுதாயத்தை நிறுவுவதற்கு இடைப்பட்ட, மாறிக் கொண்டிருக்கும் ஒரு கட்டமாகும். அதாவது, புதிய ஜனநாயகப் புரட்சியின் கட்டமாகும். புதிய ஜனநாயக புரட்சியானது சோசலிசப் புரட்சிக்கான இன்றியமையாத முன் தயாரிப்பாகும். சோசலிசப் புரட்சியானது புதிய ஜனநாயகப் புரட்சியின் தவிர்க்க இயலாத பின்விளைவாகும். புதிய ஜனநாயகப் புரட்சியை முதலில் நிறைவேற்றுவதின் மூலம் மட்டுமே நமது நாடு ஒரு சோசலிச சமுதாயத்தை நிர்மாணிக்கும் கட்டத்திற்கு முன்னேற முடியும். "
மேற்கண்ட நிர்ணயிப்பின் மூலம் எஸ்.ஓ.சி. கும்பல் செய்யக்கூடிய புரட்சி எத்தகைய தன்மை வாய்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள். அதாவது, அரை அடிமை நாடாக இருக்கக்கூடிய இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவது. மேலும் அரை நிலப்பிரபுத்துவத்திலிருந்து விடுதலை கொடுப்பது! இதைதான் இவர்கள் புதிய ஜனநாயக புரட்சி என்று சொல்லுகின்றனர். இதன் மூலம் இவர்கள் வெப்படையாக சொல்லுவது என்ன? இவர்கள் செய்யப்போவது சோசலிசப் புரட்சியல்ல என்பதுதானே! அப்புறம் எப்படி இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தை கைவிட்டு விட்டது என்று கோயபல்ஸ் போன்று கதைப்பார்கள்! இதனை ஏகாதிபத்திய ஆதரவு சேவை என்று அழைக்காமல் எப்படி அழைப்பது! அல்லது மார்க்சியத்தை திரித்த இந்த திரிபுவாதிகள் தற்போது அவர்களது திட்டத்தையும் கூட திரிக்கத் துணிந்து விட்டனர் என்றுதானே அர்த்தம்.
இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் கூற வருவது என்னத் தெரியுமா? தற்போதைய ஆளும் வர்க்கமான பெரு முதலாளித்துவத்தை மேலும் பெருக்க வைப்பதற்கான புரட்சியையே இவர்கள் நடத்தப் போகிறார்கள். அதாவது முழுமையான முதலாளித்துவ புரட்சி. ஏனெனில் இவர்களது நிர்ணயிப்பின்படி தற்போது அரை காலனியும் - அரை நிலப்பிரபுவுமே ஆளும் வர்க்கமாக இருப்பதாக சித்தரிக்கின்றனர். எனவே இந்த பிற்போக்கு வர்க்கத்தை வீழ்த்துவதன் மூலம் முழுமையான முதலாளித்துவத்தையே இவர்கள் கட்டத் துடித்துக் கொள்கிறார்கள். இதுதான் இவர்களது மறைமுக சோசலிச முகம்!
மொத்தத்தில் இந்த ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பல் திரிபுவாதத்தையே தனது பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகிறது என்ற முடிவுக்கு வரலாம். இது கிடக்கட்டும்! இவர்கள் சோசலிசத்தை எப்போது கொண்டு வருவார்கள் என்பதற்கான விளக்கத்தையும் கொஞ்சம் பாருங்கள் அது இன்னும் வேடிக்கையாக இருக்கும்.
ம.க.இ.க. மறைமுக கட்சித் திட்டம்
பிரிவு 45-இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். இதையும் ஆழமாக படியுங்கள்
"...புதிய ஜனநாயகப் புரட்சி என்ற முதற்கட்டம் முழுமைபெற்ற உடனேயே இந்தியப் புரட்சியானது எத்தகைய இடைவெளியுமின்றி சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு செல்கிறது. சோசலிசப் புரட்சி எவ்வளவு துரிதமாக முழுமை பெறும் என்பது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும், நமது பலத்தின் அளவையும், உணர்வு பூர்வமாக, அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் பலத்தையும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் அமைந்த இந்திய உழைக்கும் மக்களின் ஐக்கியப்பட்ட அமைப்பின் பலத்தையும், உலக சோசலிச இயக்கத்தின் பலத்தையும் பொறுத்திருக்கும். கட்சி ஒரு தங்கு தடையற்ற புரட்சிக்காக நிற்கிறது. நமது கட்சியின் இறுதி நோக்கம் முதலாவதாக ஒரு சோசலிச சமுதாயத்தையும் பின்னர் ஒரு பொதுவுடைமைச் சமுதாயத்தையும் அதாவது வர்க்கங்களற்ற, சுரண்டலற்ற, போர்களற்ற சமுதாயத்தையும் நிறுவுவதாகும். "
அதவாது இந்தியாவில் இவர்கள் கூறும் திட்டத்தின் அடிப்படையில் சோசலிசம் எப்போது வரும் என்றால், 1. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அதிகரித்திருக்க வேண்டும்.2. இந்திய உழைக்கும் மக்களிடையே ஐக்கியப்பட்ட பலம் அதிகரிக்க வேண்டும்.3. உலக சோசலிச இயக்கம் இதற்கு சாதகமாக இருக்க வேண்டும்.இந்த மூன்று அம்சங்களும் இணைந்திருந்தால்தான் சோசலிச புரட்சி வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். இவை எப்போது சாத்தியம்! அதாவது, இன்றைக்கு உலகளவில் முன்னுக்கு வந்திருக்கும் முரண்பாடுகளில் பிரதானமாக இருப்பது சோசலிசத்திற்கும் - ஏகாதிபத்தியத்திற்குமான முரண்பாடே. எனவே ஏகாதிபத்தியத்தை பின்னுக்குத் தள்ளும் வரையில் இந்த முரண்பாடு நீடித்துக் கொண்டே இருக்கும். மேலும் இவர்களது வாதப்படி ரஷ்யா (தற்போது இல்லை) அது சமூக ஏகாதிபத்தியமாக மாறி விட்டது. சீனாவை இவர்கள் முழு சோசலிச நாடாக ஏற்கவில்லை. அப்புறம் மிச்சம் மீதி இருப்பத குட்டி குட்டி நாடுகளாக கியூபா, வியட்நாம், வடகொரியா, லாவோஸ் போன்றவைகளே... இந்த நிலையில் உலக சோசலிச பலம் எவ்வாறு அதிகரிக்கும் என்று தெரியவில்லை? அல்லது இந்தியாவிற்கு முன்னால் உலகில் வேறு பல நாடுகளில் சோசலிசம் வரும் என்ற கனவு காண்கிறார்களா என்றும் தெரியவில்லை. எனவே இந்த ம.க.இ.க. வின் சோசலிசம் என்பது வெறும் கற்பனாவாத சோசலிசமே! என்ற முடிவுக்கு வரலாம்.
உண்மை இவ்வாறிருக்க, சி.பி.எம்.க்கு எதிரான இவர்களது கோபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் இவர்கள் பெரும் திருப்தி அடைவதாக மட்டுமே தெரிகிறது. நாம் இவர்களது கட்சித் திட்டம் தேய்ந்து போன - நொண்டிக் குதிரை என்று விமர்சித்தால்... நந்திகிராம் - சிங்கூர் என்று பாட்டு பாடுகிறார்கள்.
இது குறித்து ம.க.இ.க. சிந்தனைப் புலி நண்பர் அசுரன் எழுதியுள்ளதை கவனியுங்கள்.
நந்திகிராமிலும், கேரளாவிலும் செய்து வருவதா? ஏன் கேட்கிறேன் என்றால் தனியுடைமையை (உற்பத்தி கருவிகளில்) அழிப்பது என்பதன் பொருள் நந்திகிராம் மக்களின் தனியுடைமையை அழித்து அதை டாடா சலிம் உள்ளிட்டவர்களின் உடைமையாக்குவது என்று போலிட் பிரோவில் முடிவெடுத்து சொன்னால் அதை சந்திப்பு இங்கு பிரசூரிக்கும் அபாயம் உள்ளது(அபாயம் என்ன அபாயம் அல்ரெடி அதெல்லாம் செஞ்சி முடிச்சி அந்த இடத்துல புல்லே முளைச்சிருச்சி - பார்க்க சந்திப்பின் பழைய பதிவுகள்).
நந்திகிராம் - சிங்கூர் குறித்து ஏற்கனவே விரிவான பதிவுகள் சந்திப்பில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து எங்களது நிலைபாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால், மூழ்கப் போகும் ஓட்டைப்படகில் பயணம் செய்யும் ம.க.இ.க. இன்னமும் அதைப் பிடித்தே தொங்கிக் கொண்டிருக்கிறது.இந்த இடத்தில் சுருக்கமாக இரண்டு - மூன்று கேள்விகளை மட்டும் எழுப்ப விழைகிறேன்.
ம.க.இ.க. மறைமுகத் திட்டப்படி இந்தியா ஒரு அரை காலனி நாடு, அதுவும் நான்கு நாடுகளுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு. இந்த காலனியாதிக்கத்தை தூக்கியெறிவதற்காக அவதாரம் எடுத்துள்ள அமைப்புதான் ம.க.இ.க.! இவர்களது வாதப்படியே வைத்துக் கொண்டால், ஒரு காலனி நாட்டிற்குள் - அதுவும் மாநிலத்திற்குள் சோசலிசம் இருக்க முடியுமா? மேற்குவங்கம், கேரளா, திரிபுரா இந்த மூன்று மாநிலங்களில் ஏதோ சி.பி.எம். தலைமையில் சோசலிச ஆட்சி நடைபெறுவதாக அறிவித்தது போல் ஒப்பாரி வைப்பது அவர்கள் ஏற்றுக் கொண்ட திட்டத்திற்கு எதிர்வினையாக அமையவில்லையா?
மேற்குவங்கத்தில் 25 ஆண்டு காலம் முதல்வர் பொறுப்பில் இருந்த தோழர் ஜோதிபாசு மாநில அரசின் அதிகாரம் குறித்து இரத்தினச் சுருக்கமாக கூறியது என்ன தெரியுமா? அது ஒரு பெரிய முனிசிபாலிட்டி... அவ்வளவுதான். எந்தவிதமான நிதியதிகாரமோ அல்லது தொழில் வளர்ச்சியை சுயேச்சையாக ஏற்படுத்துவதற்கான அதிகாரமே இல்லாத இந்திய அரசின் முதலாளித்துவ அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் அமைப்புகளே மாநிலங்கள். இந்த மாநில அரசில் பங்கேற்பது என்பது முதலாளித்துவ திட்டங்களுக்கு உட்பட்டு மிகச் சிறிய நன்மைகளை மட்டுமே இந்த மக்களுக்கு செய்ய முடியும்.
அந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு கிடைத்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி மேற்குவங்கம், கேரளா, திரிபுராவில் நாட்டிற்கே முன்னுதாரணமாக 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் உட்பட உழைக்கும் மக்கள் பயனடையும் விதத்தில் நில விநியோகம் செய்து பெரும் பகுதி உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது.அதேபோல் பஞ்சாயத்தில் 50 சதவிகித நிதியை ஒதுக்கி - அதிக அதிகாரங்களை வழங்கியதோடு, தலித் மற்றும் பெண்களின் அரசியல் ரீதியான பங்கேற்பை ஊக்குவித்துள்ளது.கல்வி ரீதியாகவும், சிறு தொழில்களைப் பாதுகாக்கவும், தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கவும் நாட்டிலேயே முன்னணியில் நிற்கிறது.இந்தப் வரிசையில் தற்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடலின் ஒரு பகுதியாகவே சிங்கூர் - நந்திகிராம் திட்டமிடல் முன்னுக்கு வந்தது. படித்து முன்னேறியுள்ள உழைக்கும் மக்களின் பிள்ளைகளை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்துவதற்கு ஒரு மாநில அரசு என்ற முறையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த மாக்கான்கள்... இல்லை... இல்லை இவர்கள் கடப்பாரையோடும், கலப்பையோடும்தான் இருக்க வேண்டும் என்று உறுமுகிறார்கள். இப்படித்தான் இவர்கள் உற்பத்தி சக்தியை வளர்த்தெடுப்பார்கள் போலும்...
எனவே, ம.க.இ.க. தலைமை இந்திய அரசைப் பற்றிய நிர்ணயிப்பில் ஏற்பட்ட கோளாறு... முதலாளித்துவ சோசலிசத்தை உயர்த்திப் பிடிப்பதில் போய் முடிந்துள்ளது.
இறுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் நிறைவேற்ற உள்ள மக்கள் ஜனநாயகப் புரட்சியில், ஏகாபத்தியத்துடன் உறவு கொண்டுள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ நிலப்புரக்களை ஒழிப்பதுதான் முதற் கடமையாக கொண்டுள்ளது. இந்திப் புரட்சியின் முதல் கட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டியதோடு முடிந்து விட்டது. தற்போது இரண்டாவது கட்டத்தில் இந்தியா நின்றுள்ளது. மூன்றாவது கட்டத்தில்தான் சோசலிசத்தை நோக்கிய பயணம் துவங்கும். இறுதிக் கட்டமே கம்யூனிசம்.
இந்த உண்மையின் அடிப்படையிலேயே தோழர் ஜோதிபாசுவும், தோழர் புத்ததேவும் தங்களது மாநிலத்தில் தனியார் மூலதனத்தை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் தற்போதைய கட்டம் சோசலிசத்திற்கானது அல்ல என்று தெளிவாக உரைத்தார்கள். இதனை மாக்கான்கள் திரித்து தனது ஏகாதிபத்திய சேவையை நன்றாக ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய தொழிலாளி வர்க்கம் ஊளையிடுபவர்கள் பின்னால் ஒரு போதும் இருந்தது கிடையாது!
சந்திப்பு
No comments:
Post a Comment