Monday, December 12, 2011

குருட்டு .திருட்டு பூனை: மகஇக

சில தினங்களுக்கு முன்பு, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பகைமை வேண்டாம், பரஸ்பரம் புரிதல் வேண்டும் என்ற கருத்தில், ஒரு பதிவெழுதி இருந்தோம். சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு நிலைபாட்டிலிருந்து அதனை விளக்க முற்பட்டிருந்தோம். அதிலுள்ள சில வரிகளை எடுத்து வைத்துக்கொண்டு நேற்று இணையச் சண்டியர் வினவுக் கும்பல் சிலா வரிசை போட்டிருக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.எம் ஆகிய மூன்று தேசீயக் கட்சிகளை மும்மூர்த்திகளாக்கி, அவர்களை தனிமைப்படுத்தினால் போதும், முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் தானாக தமிழகத்தின் பக்கம் பெருக்கெடுத்து வரும் என கம்பு சுழற்றியிருக்கிறது.


பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. எப்போதுமே அவைகளுக்கென்று  ஒரு தொலைநோக்குப் பார்வையும் மக்கள் மீதான அக்கறையும் இருந்ததில்லை. மக்களிடையே பிரிவினைகளை விதைத்த வரலாறு அந்தக் கட்சிகளுக்குண்டு. அதில் குளிர்காய்ந்து அந்தக் கட்சிகள் தங்கள் அரசியல் பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கின்றன. அவைகளோடு சி.பி.எம்மையும் சேர்ப்பதில்,  வினவுக்கும்பலுக்கு  அலாதி சந்தோஷம் போலும்.  உண்மையைப் புரட்டும் இந்த மூடக்கும்பல் இனி புரட்டுக் கம்யூனிஸ்டுகள் என்றே அழைக்கப்படுவார்கள். 



சி.பி.எம்மின்  அரசியல் தலைமைக்குழு, மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறது:



“முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து விசாரிக்க உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது விசாரணையை விரைவுபடுத்தி இந்தப்பிரச்சனையில் உரிய காலத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதுவரை மத்திய அரசு தலையிட்டு கேரள, தமிழக அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அணையின் பாதுகாப்புக்கு தேவைப்படும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.”



இதில், எங்கே சி.பி.எம் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைப்பதாக இந்த புரட்டுக் கம்யூனிஸ்டுகள் சொல்கிறார்கள்?  உச்சநீதிமன்றத் தீர்ப்பு விரைவாக்க வேண்டும் எனவும், அதுவரையில் அணையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும்தானே சொல்கிறது. ஆனால் இருக்கும் அணையை உடைத்து, புதிய அணை கட்டவதற்கு  தமிழகத்தை தயார்படுத்தும்  நோக்கமிருக்கிறது சி.பி.எம்முக்கு என்று ஒரு அயோக்கியத்தனமான குற்றச்சாட்டை போகிற போக்கில் வைக்கிறது இந்த வினவுக்கும்பல் (அ) புரட்டுக் கம்யூனிஸ்டுகள். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு சி.பி.எம்மைத் தனிமைப்படுத்த வேண்டும் என்னும் கண்மூடித்தனமான வெறி இந்த கும்பலுக்கு இருப்பது தெரிகிறது.



முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கும் சூழலில், சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இப்படி தனது நிலைபாட்டை எடுத்து அறிவிப்பதற்கு என்ன அர்த்தம் இருக்கும் என்பது இந்த அதிமேதாவிகளுக்குத் தெரியாதா? தீவீரத்தை மட்டுப்படுத்துவதற்கும், நிதானம் கொள்ள வைப்பதற்கும் இந்த நிலைபாடு உதவுமா இல்லையா? அதிலிருந்தே தெரியுமே, இந்த நிலைபாட்டின் உண்மையான அர்த்தம்? 


இதற்கு மாற்றாக கட்சிக்குள்ளே யார் பேசினாலும், செயல்பட்டாலும், அது தோழர்.அச்சுதானந்தனாகவே இருந்தாலும் அது கண்டிக்கதக்கது அது மட்டும் அல்ல கேரள சிபிஎம் குழுவும் அவரை கண்டித்து உள்ளது. அதை சரிசெய்வதும் அரசியல் நேர்மை கொண்ட  ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரம். சி.பி.எம் என்ற அகில இந்திய கட்சி தன் கருத்தாக எதை மக்களிடம் தெரிவிக்கிறது என்று பார்ப்பதே அறிவுடமை. அதில் என்ன குறைபாடு இருக்கிறது என்று நேர்மையாகச் சொன்னால் விவாதம் நடத்தலாம். 



இந்த நிலைபாடு அதன் உள்ளடக்கத்தில், ஒரு பொதுவான முடிவுக்கு இருதரப்பும் கட்டுப்பட வேண்டும் என்று சொல்கிறது. பகைமை உணர்வு தூண்டப்படுவதற்கு வழிகோலாமல் மத்திய அரசு தன் பொறுப்பைச் செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டுகிறது.  ‘டேம் 999’ படம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தபோது, கருத்துச் சுதந்திரத்துக்கு குரல் கொடுப்பதற்கு மாறாக,  அந்தப் படத்தைத் திரையிடுவது பிரச்சினையை மேலும் பெரிதாக்கும் என்றுதானே சி.பி.எம் கட்சி சொல்லியது. அதிலெங்கே தமிழகத்துக்கு துரோகம் செய்யும் சிந்தனை இருக்கிறது? இனிமேலும் வினவுக்கும்பல் இதுபோல சில்லுண்டித்தனங்கள் செய்யாமல் நேர்மையாக அரசியல் பேசினால், விவாதத்துக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.



முல்லைப் பெரியாறு பிரச்சினையை வைத்து இரு பக்கமும் எழுப்பப்படும் பகை மூட்டம் இந்த வினவுக்கும்பல் அறியவே இல்லையா? இதே இணையத்தில் தமிழில்தான் ‘தமிழர்கள்’ என்றும்,  ‘மலையாளிகள்’ என்றும் வார்த்தைகள் சமீபகாலமாகக் கொட்டப்படுவதை வினவுக்கும்பலின் கண்களுக்குத் தட்டுப்படவேயில்லையா?  இந்த மனோபாவம் எதைக் கட்டியெழுப்பும் என்று இந்த மூடக்கும்பலுக்குப் புரியாதா? எல்லாம் தெரியும். எரிகிற வீட்டில் எதையாவது பிடுங்கித் தின்ன முயலும்  இந்த அற்பக்கும்பலுக்கு இன்னும் ஏன் சர்வதேச பாட்டாளி வர்க்கம் என்னும் அந்த அற்புத சொற்றொடரெல்லாம்?



ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுவிட்டது. இன்று பூதாகரமாய் உருவெடுத்திருக்கிறது. அதை சேதாரங்களின்றி எப்படித் தீர்ப்பது என்று யோசிப்பதே இப்போதைய கடமை. அதைவிட்டு விட்டு, பிரதேச, மொழி, இனப் பகைமையை ஊட்டுவது குறுகிய அரசியல். எதிர்காலத்தையே அது சிதைத்துப் போடும். முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் வருவதும் முக்கியம். தமிழகம், கேரள மக்களிடையே இணக்கமும் உறவும் மலருவதும் முக்கியம். அதை நிலைநிறுத்துவதுதான் இன்றைய சோதனை. அதை உணர்ந்துதான்  மார்க்சிஸ்டுகள்  பேசுகிறார்கள். இரு மாநிலங்களுக்குள்ளேயில்லை, பங்களாதேஷூடனான நதிநீர் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு கண்டவர்கள் இந்திய மார்க்சிஸ்டுகள் என்பதை காலம் குறித்தே வைத்திருக்கிறது.



யாரையாவது வம்புக்கிழுத்து, வாய்க்கு வந்தபடி பேசி திருப்தி கொள்ளும் இந்த வினவுக்கு ஒரு கேள்வியை இப்போது வைக்கிறோம். இவ்வளவு தூரம் வந்துவிட்ட இந்த முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு, சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு நிலைபாட்டை நிராகரித்துவிட்டு,  இப்போது ஒரு சுமூகமானத் தீர்வை சொல்லுங்களேன் ஐயா, பார்ப்போம். உங்கள் சர்வதேச பாட்டாளி வர்க்க புரட்சிகர சிந்தனையையெல்லாம் கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள், கேட்போம்.



அது அவர்களால் ஒருபோதும் முடியாது. ‘நானும் ஒரு ஆள்தான், என்னையும் கொஞ்சம் ஏறிட்டுப் பாருங்களேன்’  என்று தமிழின ஆர்வலர்கள் முன்பு தன்னை நெளித்து வளைத்து காண்பித்துக் கொண்டிருக்கிறது வினவுக்கும்பல்.   காங்கிரஸோடு, பா.ஜ.க.வோடு, சி.பி.எம்மோடு எல்லாம் தமிழின ஆர்வலர்கள் உறவு கொண்டாடியதை நினைவூட்டி ‘உச் ’ கொட்டிக்கொள்கிறது. இந்த நெளிப்பும், வளைப்பும் சும்மா ஒன்றுமில்லை. சர்வதேச பாட்டாளி வர்க்கச் சுடரை தமிழகத்தில் ஏற்றிப் பிடிப்பதற்காக. அட அரைவேக்காடுகளா, உங்களுக்கு ஏன் வேர்க்கிறது, எங்கே வேர்க்கிறது என்பதுதான் தெரிகிறதே. 



மக்கள் பிரச்சினைகளைப் பேச, முன்வைக்க பாராளுமன்றத்தை பயன்படுத்தும் மார்க்சிஸ்டுகள் தேர்தல்களின்போது வைத்துக்கொள்ளும் தொகுதி உடன்பாட்டை காலமெல்லாம் கிண்டல் செய்யும், இந்த வினவுக்கும்பல் இப்போது யாரோடு கைகோர்க்க, கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறதாம்? சமீபகாலமாக தமிழ் இன உணர்வுகளைத் தூண்டி வரும் சக்திகளோடு! வை.கோ, ராமதாஸ், பழநெடுமாறன் போன்றவர்களெல்லாம்  இப்போது இந்தக் கும்பலுக்கு இனிக்கும் ‘தமிழின ஆர்வலர்களாம்!’  மே.வங்காளத்தில் மார்க்சிஸ்டுகளை எதிர்க்க மம்தாவோடு கூட்டணி வைத்தவர்களின் முகங்கள் தமிழகத்தில் இப்படியாகத் தெரிகின்றன.



முல்லைபெரியார் போராட்டத்திற்கு தீர்வு என்று போகிற போக்கில் காமடியாக இப்படி சொல்லி போகிறது வினவு கட்டுரை ஒன்று:


1. அரை முதலாளித்துவ நிலபிரபுத்துவ தரகு இந்திய அரசு அம்மாநில அரசு மீது இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 


2. இந்தியாவில் இருந்து பிரிந்து போய்விடவேண்டும்.


3. தமிழக ஆறுகள் வழியே கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரை தறாமல் குறுக்கே படுத்துக்கொள்வது.


4. நடந்த செல்பவர்கள் , சைக்கிளில் போகிறவர்களை தடுத்து நிறுத்து


5. கேரளத்துக்குச் செல்லும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தை மறித்து மகஇக கொடியை நட்டுவைப்பது.




இந்த வினவுக் கும்பலும் கம்யூனிஸம் பேசுகிறது. அதுதான் சகிக்க முடியாததாய் இருக்கிறது. உண்மை போலும் கயமை!.


3 comments:

Nakkasalem Selvakumar perambalur said...

muthala communisam na enna vendru therinthu kollunkal... yen endral ellorukkum ellam kidaika vendum enbatha comunisa kolkai...!!!

விடுதலை said...

எல்லோருக்கும் எல்லாம் என்பது சரிதான் அதற்கு சிலரிடம் இருப்பதை பிடிங்கினால்தான் கொடுக்கமுடியும்

Anonymous said...

Achuthananthan protests against the DAM.what is your stand.If he is part CPM why he is protesting instead of waiting for supreme court decision?

Your party is just joke.