Monday, August 24, 2009

சீரழிந்த நக்சலிசம்

எஸ்.ஏ.பெருமாள்

மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப்பாதுகாப்புப்படை, மாநில ஆயுத போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போதே மேற்குவங்கத்தில் லால்கார் மலைப்பகுதியில் மார்க்சிஸ்ட்டுகளை மாவோயிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகள்

சுட்டுக் கொலை செய்து வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும் இந்த பயங்கரவாதக் குழுக்களுக்குள் ஆயுதப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட உறவுகளும் தொடர்புகளும் உண்டு. துப்பாக்கி, வெடிகுண்டுகளோடு படுகொலைகளை நிகழ்த்தி வரும் பயங்கரவாதிகளை இந்திய ஆளும் வர்க்கங்களும், அரசும், அவர்களது செய்தி ஊடகங்களும் வெறும் தீவிரவாதிகள் என்றே பிரச்சாரம் செய்கின்றன. பயங்கரவாதம் இங்கு மட்டும் தீவிரவாதமாகவே கருதப்படுகிறது.

1968ம் ஆண்டில் நக்சல் பாரியில் ஆயுதமேந்திய புரட்சியை சாருமஜாம்தார், கனுசன்யால், ஜங்கால் சந்தாஸ் தலைமையில் நடத்தி தனிக்கட்சி தொடங்கினார்கள். நக்சல் பாரிப்புரட்சி நாடெங்கும் பரவுகிறது என்றனர். பின்பு பிரதேச அளவில் பல குழுக்களாய் பிளவுபட்டுப் போனார்கள். ஒன்றையொன்று மறுக்கின்ற குறுங்குழுக்களாய் சிதறிப் போயினர்.

பின்னர் இதில் பலரும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கைவிட்டதாகக் கூறினர். ஒரு பகுதியினர் தேர்தல் பாதைக்கும் வந்தனர். ஆயுதப் புரட்சிக்கு இது தருணமல்ல என்ற முடிவிலிருந்தே ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதற்கு நேபாள மாவோயிஸ்ட்டுகளை சிறந்த உதாரணமாய் கூறலாம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றிய மார்க்சிய நிலைபாடு புரட்சியின் மூலம்தான் என்பது அனைத்து மார்க்சியர்களுக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஆயுதப் புரட்சியினால் மட்டும் என்பதல்ல. புரட்சி எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் ஆளும் வர்க்கமும் அதன் அரசு இயந்திரமும் மட்டுமே தீர்மானிக்கின்றன. இந்த வடிவம் காலத்திற்குக் காலம், தேசத்திற்கு தேசம் மாறுபடுகிறது. நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்பது கூட சட்டரீதியான நடைமுறைகளின் மூலம் மக்களைத் திரட்டுவதற்கான முயற்சிதான். சமூக மாற்றத்துக்கான புரட்சியை எந்த ஒரு குறிப்பிட்ட வடிவத்தோடும் வரம்பு கட்டிவிட முடியாது. இதற்கு நக்சலைட்டுகளின் அனுபவமே போதுமானது.

பொதுவாக மாவோயிஸ்ட்டுகள் மலைப்பிரதேசங்களையே தங்கள் வாழிடமாகக் கொண்டுள்ளனர். அரசுகளின் நிழல்படாமல் எந்த வளர்ச்சியுமின்றி பழங்குடி மக்கள் நிராதரவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்ற எந்த அடிப்படைத் தேவைகளும் கிடைக்காத பழங்குடி மக்களிடம் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகளோடு ஊடுருவிவிடுகிறார்கள். அரசுகளின் மீதான கோபத்தில் ஒரு பகுதியும், பயத்தினால் ஒரு பகுதியுமாய் பழங்குடிகள் இவர்களிடம் சரணடைகின்றனர். போலீஸ் தாக்குதல்கள் வரும்போது மாவோயிஸ்ட்டுகள் பழங்குடிகளை மனிதக் கேடயங்களாய் பயன்படுத்துகின்றனர்.

ரயில்கள், பாலங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், மின் உற்பத்தி மையங்கள், பெரும் தொழிற்சாலைகளுக்குக் குண்டு வைக்கிறார்கள். மக்களின் வாழ்விடங்கள், அவர்களது அத்தியாவசியத் தேவைகள், போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் மீது திட்டமிட்டு குண்டுவீசுகின்றனர். பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை சீர்குலைத்தால் தொடர்ந்து அப்பகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே நீடிக்கும். தங்கள் பிடியிலுள்ள பழங்குடிப் பகுதிகளையும் இதன்மூலம் தங்கள் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்துக் கொள்கிறார்கள். பழங்குடி மக்களின் நலன்களுக்காகவே ஆயுதமேந்துகிறோம் என்று அவர்களை நம்ப வைக்கிறார்கள். ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் ஊழல் மலிந்த காவல்துறையைத் தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். போதை மருந்துக்கான பயிர் சாகுபடி மலைப்பகுதிகளில் நடைபெறுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது. பணத்தை வைத்து நவீன ஆயுதங்களை அவர்களால் வாங்கிக் குவிக்க முடிகிறது.

வர்க்கப்புரட்சியின் மூலம் வர்க்கங்களை ஒழிப்பது எனும் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடு, எதிரி வர்க்க உறுப்பினர்களை ஒழிப்பது எனும் தனிநபர் பயங்கரவாதமாய் சீரழிந்து போனது. இப்போது தனது வர்க்க உறுப்பினர்களையே கொல்வது, மார்க்சிஸ்ட்டுகளை கொலை செய்வது என்ற பயங்கரவாதமாய் வளர்ச்சியடைந்துள்ளது. இதைக் கூட மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாகவே சந்திக்க விரும்புகிறது என்று பகிரங்கமாய் கூறியுள்ளது. சந்திக்கும் என்பது உறுதி.

No comments: